விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அள்ளித்தெளித்த வாக்காளர்கள்... 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

Jul 10, 2024 - 19:26
Jul 10, 2024 - 21:11
 0
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அள்ளித்தெளித்த வாக்காளர்கள்...   82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு:-  வாக்குகள் பதிவான 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்பிறகு ஆளும் கட்சியான திமுக முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

3 முக்கிய வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 29 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதே வேளையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதனுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்தன.

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில், 1.95 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 276 வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவான 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளுக்கு வேட்பாளர்களின் பூத் ஏஜெண்ட்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு அலுவலர்களால் சீல் வைக்கும் பணி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சீல் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. இன்று பதிவான வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அதுவரை வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow