அரசியல்

சாத்தூரில் குடியேறவுள்ள விஜய பிரபாகரன்? 4 தொகுதிகளை டார்கெட் செய்யும் தேமுதிக..

Vijaya Prabhakaran : நடிகரும் மறைந்த முன்னாள் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மறைந்த பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜய பிரபாகரன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் களமிறங்கி மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சாத்தூரில் குடியேறவுள்ள விஜய பிரபாகரன்? 4 தொகுதிகளை டார்கெட் செய்யும் தேமுதிக..
Vijaya Prabhakaran

Vijaya Prabhakaran : விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புகோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள விஜய பிரபாகரன் [ Vijaya Prabhakaran ] தொடர்ச்சியாக தற்போது அங்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு, கனிமொழி தூத்துக்குடியில் குடியேறி தொகுதி மக்களின் சுப, துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு கள அரசியல் செய்தது 2024 தேர்தல் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது.

கூட்டணி உறுதி:

தேர்தல் நெருங்கும் போது கூட்டணி மாறும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அதிமுகவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது தேமுதிக [DMDK]. மேலும், அக்கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லாததால் தேமுதிகவே வெளியேற நினைத்தாலும் கூட்டணியில் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார்.

மேலும் விஜய பிரபாகரன் நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள  6 சட்டமன்ற தொகுதிகளை கள ஆய்வு செய்து 4 தொகுதிகளை தேமுதிக இறுதிபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த தொகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும், முக்கிய புள்ளிகளும் இடம்பெறுவதால் எந்த தொகுதியை கேட்பதில் இடியாப்ப சிக்கல் நீடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம்:

விஜயகாந்தின் செண்டிமெண்டான தொகுதியாக பார்க்கப்படுகிறது. முதன்முதலாக அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியது அத்தொகுதியிலுள்ள தோப்பூர் என்ற கிராமத்தில் தான். அதன் நினைவாக அந்த கிராமத்திலுள்ள கண்மாயில் 2005 ஆம் ஆண்டு தனது கட்சி தொடக்க விழா மற்றும் மாநாட்டை நடத்தினார். மேலும் எந்த பணியை விஜயகாந்த் தொடங்கினாலும் முதற்படை வீடான முருகன் கோயிலில் சென்று வழிபட்டுவிட்டே தொடங்குவார்.

2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து போட்டியிட்டு 40,000 வாக்குகளை பெற்றது. தொடர்ச்சியாக அதிமுக கூட்டணியில் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.டி.ராஜா அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக தேர்வானார். அந்த தொகுதி தேமுதிகவிற்கு சாதகமான தொகுதியாக பார்க்கபட்டாலும், அதிமுக மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பா தற்போது அத்தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.

தற்போது அத்தொகுதியை தேமுதிகவிற்கு அவர் விட்டுகொடுப்பார் என்பதில் சாத்தியமில்லை. ஏனென்றால் அவரது மகனும் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யனும் அத்தொகுதியை டார்கெட் செய்து வருவதால், அத்தொகுதியை விஜயபிரபாகரனுக்கு ஒதுக்குவதில் சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனாலும், சில தினங்களுக்கு முன் தேமுதிக உறுப்பினர் மறைவுக்கு சென்று விஜய பிரபாகரன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

திருமங்கலம்:

முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மேலும், தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பேசு பொருளானது. திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான சேடப்பட்டி முத்தையா மகனுமான மணிமாறன் களமிறக்கும் பட்சத்தில் டஃப் கொடுக்க ஆர்.பி.உதயக்குமாரே சரியான தேர்வு என்பதால் இங்கும் அவர் நிற்பதற்கு வாய்ப்பில்லை.

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளதால் அங்கும் வாய்ப்பு குறைவு, அருப்புக்கோட்டையை பொறுத்தமட்டில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனும், அவருக்கு போட்டியாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் உள்ளதால் அங்கும் வாய்ப்பு குறைவு என்பதால் தேமுதிக சாத்தூரை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

சாத்தூர்:

கடந்த வாரம் திமுக 2026 தேர்தலுக்கான ஒருக்கிணைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுகவும் தனது அதிகாரபூர்வ X தளத்தில் ’வெல்லட்டும் இரட்டை இலை’ என்ற வாசகத்துடன் 2026 தேர்தலுக்கு தயாராவோம் என எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட வாரியாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திலும் தேமுதிக கோரிக்கை அம்மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

ராஜவர்மனை தவிர்த்து அதிமுகவில் பெரிய தலைகள் அங்கு இல்லாததால், தேமுதிகவை  பணிகளை மேற்கொள்ள இபிஎஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுபோக, தேமுதிக முன்னணி தலைவர்களிடம் பேசியபோது சாத்தூரும் ஒரு தேர்வாக உள்ளது என்றும் மேலும் சென்னையை காலி செய்து சாத்தூரில் விஜயபிரபாகரன் குடியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் திருப்பரங்குன்றம், சிவகாசி, திருமங்கலம், சாத்தூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் தேமுதிகவினர் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

-மா.நிருபன் சக்கரவர்த்தி