'இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதி'... பொங்கிய சு.வெங்கடேசன்... மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம்!

''சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்''

Jul 7, 2024 - 12:27
 0
'இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதி'... பொங்கிய சு.வெங்கடேசன்... மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம்!
சு.வெங்கடேசன்

சென்னை: மத்திய அரசு பல்வேறு வகையில் இந்தியை திணிக்க முயன்று வருவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 

அண்மையில் மத்திய அரசு, இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் (ஐஇசி) சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, மற்றும் பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை நாட்டில் அமலுக்கு கொண்டு வந்தது.

இந்த சட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால், இதன்மூலம் மத்திய அரசு அப்பட்டமான இந்தி திணிப்பை மேற்கொள்கிறது என்று திமுக, காங்கிரஸ் மட்டுமின்றி, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ நியமன தேர்விலும் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. 

அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள். 

பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். 

பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். 

பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. 

இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சமதள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்றக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow