TVK Vijay: தவெக மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்... பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த புது அப்டேட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ள புது அப்டேட், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
விழுப்புரம்: கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், விரைவில் முழுநேர அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், அதன் கொடி உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி தவெக மாநாடு வரும் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போலீஸார் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், அதன் புதிய தேதியை விஜய் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் முதல் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இருதினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டு தனது கட்சியின் தொண்டர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள். அது சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!! என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த மாநாட்டுக்கான முதல் நடவடிக்கையாக, காவல்துறையிடம் அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலை நேரில் சந்தித்தனர். அவரிடம் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் கேட்டதோடு, காவல்துறை சார்பாக கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உரிய பதில் விளக்கம் அளித்தும் மனு கொடுத்தார். மாநாடு நடத்துவதற்காக 177 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடத்திலேயே வாகனங்கள் நிறுத்தவும், கழிவரைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவும் உள்ளது.
இதனிடையே, மாநாட்டு பணிகளுக்காக தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தொகுதிக்கு 2 பெண்கள் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொண்டகளையும், பொதுமக்களையும் அழைத்து வருவது உள்பட பல்வேறு பணிகளைச் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 22ம் தேதி மாநாடு தொடர்பாக மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வருவது உள்பட காவல்துறையின் நிபந்தனைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முக்கியமான சில மாவட்டங்களின் தலைவர்கள் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வந்து விஜய்யை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காவல்துறையிடம் மாநாட்டுக்கான அனுமதிக்கான மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த். அப்போது காவல்துறை சார்பாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருப்பதாகவும், மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒரு வாரத்தில் செய்ய இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த முறை தவெக மாநாடு திட்டமிட்டபடி கண்டிப்பாக நடைபெறும் என்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
What's Your Reaction?