அரசியல்

TVK Vijay: தவெக முதல் மாநாடு... பரபரப்பான தளபதி விஜய்... நாளை முக்கியமான சம்பவம்... அடடே!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

TVK Vijay: தவெக முதல் மாநாடு... பரபரப்பான தளபதி விஜய்... நாளை முக்கியமான சம்பவம்... அடடே!
தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: சினிமாவைத் தொடர்ந்து அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, அதன் கொடி, கழக பாடல் ஆகியவற்றையும் விஜய் அறிமுகப்படுத்தினார். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு ரெடியாகிவிட்டார். கோட் திரைப்படம் வெளியானதுமே தவெக மாநாட்டை நடத்திட வேண்டும் என பிளான் செய்திருந்தார் விஜய். அதன்படி தவெக முதல் மாநாடு இந்த மாதம் (செப்) 23ம் தேதி நடைபெறவிருந்தது.  

ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தவெக மாநாட்டு தேதியை மாற்றியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அடுத்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு கொடுத்திருந்தார் புஸ்ஸி ஆனந்த். இந்த மனு போலீஸார் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், தவெக மாநாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாட்டில் பங்கேற்க வரும் தவெக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில கட்டளைகள் பிறப்பித்திருந்தார்.   

அதன்படி, தவெக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள், பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபட கூடாது. காவல்துறை அதிகாரிகளிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும் மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினருக்கு உரிய வசதிகள் செய்துதர வேண்டும். பேருந்து, வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டும் தொண்டர்கள் வர வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, மாநாடு குறித்து தவெக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோருடன் விஜய் ஆலோசனை செய்ய உள்ளாராம். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில் மாநாடு நிகழ்வுகள் குறித்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.