TVK Maanadu: தவெக மாநாட்டு மேடையில் தரமான சம்பவங்கள்... விஜய்யின் பக்கா பிளான்... டீம் ரெடி!
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மேடையேற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் 127 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் நிறுத்துவதற்கும் 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாக த.வெ.க தரப்பினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
வரும் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாக மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் திருவிழாவாக இந்த மாநாடு நடைபெறும் என தலைவர் விஜய் ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது வரை மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்களின் விவரங்கள், நிகழ்ச்சி நிரல்கள் ரகசியமாகவே உள்ளன. மேலும் இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், கட்சியின் கொள்கைகள் குறித்த விளக்கங்களும் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதனிடையே மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் முன்னிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்ற விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் அரங்கேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் கலைஞர்களை, எந்த இடையூறும் இன்றி கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், ஜார்ஜ் கோட்டை, தமிழ் பாரம்பரிய கட்டடங்கள் ஆகியவைகளை பேசும் வகையில் செட் அமைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மேடையேற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளது, விஜய்யின் அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?