TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 24, 2024 - 23:21
 0
TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

விழுப்புரம்: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனிடையே தனது கட்சியின் முதல் கொள்கை விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார் விஜய். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே தவெக மாநாடு நடைபெறுவதால், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநாட்டு திடல் உட்பட அதன் சுற்றுப்புர பகுதிகளில் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தவெக கொடிக்கம்பங்கள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன்களையும் அக்கட்சியினர் பறக்கவிட்டுள்ளனர்.  

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மேடை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தவெக மாநாட்டு பணிகளை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தலைவர் விஜய் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு விஜய் நேரில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் மாநாட்டுத் திடலுக்குச் செல்லவில்லை, அதேநேரம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தான் விஜய் பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என சொல்லப்பட்டது. காவல்துறையினரின் அறிவுறுத்தியின் பெயரில் தான் விஜய் செல்லவில்லை எனத் தெரிகிறது. அதேபோல், தற்போதும் நேரில் செல்லாமல், சிசிடிவி காட்சிகள் மூலம் மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறாராம் விஜய். 

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டு திடலில் டென்ட் அமைத்து நேரடியாக பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறாராம். இதனால் தவெக தலைவர் விஜய் சிசிடிவி கேமராக்கள் மூலம், மாநாட்டு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது சில அறிவுரைகளையும் வழங்கி வருவதாகவும், மாநாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பணிகளை கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. குடிநீர், டாய்லட், பார்க்கிங் உட்பட அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் கேட்டறிந்த விஜய், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாராம்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow