அரசியல்

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை.. அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா? பழனிவேல் தியாகராஜன்

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை.. அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா? பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில்  இன்று அரசின் நலத்திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, " தோல்வி அடைந்த மும்மொழி கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. முழுமையாக தோல்வியடைந்த மாடலை கொண்டு வந்து, வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்ன அர்த்தம்.? அறிவுள்ளவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா?

சுயமரியாதை எல்லாம் இரண்டாவது. அறிவு இருப்பவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா? மும்மொழிக் கொள்கை முதன் முதலில் 1968-ஆம் ஆண்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை மும்மொழிக் கொள்கை என்று சொல்லி வருகிறார்கள். 57 வருடங்கள் ஆகியும் மும்மொழிக் கொள்கையை எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

யாரெல்லாம் தமிழ்நாட்டைப் போல இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ அங்கு, தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. நமக்குத் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்றார் அண்ணா. உத்தரப் பிரதேசத்திலோ, பீகாரிலோ, மத்திய பிரதேசத்திலோ இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி இருந்திருந்தாலே நமக்கு 3-வது மொழியே தேவைப்படாது. இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இரண்டாவது மொழியையே சிறப்பாக கற்றுத்தர முடியாதவர்கள் 3-வது மொழியை படிக்கச் சொன்னால் அதனை ஏற்க முடியுமா.? எல்.கே.ஜி படிப்பவர்கள் முனைவர் பட்டம் படிப்பவர்களிடம் வந்து இப்படிப் படியுங்கள் எனச் சொல்வது போல இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Read more:-

அமைச்சர் பொன்முடி மீது பாஜக பிரமுகர் சேற்றை வீசிய விவகாரம் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு