மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு தொகுதி, அதிமுக கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மதுரை பெத்தானியபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே முதலிடத்தில் இருந்தது. எங்களது ஆட்சியில் உள்ளாட்சித் துறை 123 விருதுகளைப் பெற காரணமாக இருந்த எங்களது அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்குப் போடுகிறார்கள்.
எந்த குடும்ப பின்புலமும் இல்லாத, இன்று பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் சொத்துள்ள சாராய அதிபர் டி.ஆர்.பாலு போன்றவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு பொய் வழக்கு போடுகிறார்கள். அதிமுக பனங்காட்டு நரி, உங்க சல சலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். உங்க அப்பனையே சந்தித்தவர்கள் நாங்கள். நீ என்ன பிஸ்கோத்து.!
ஸ்டாலின் ஒரு டம்மி முதல்வர். இன்றைக்கு முதல்வர் யார் என்றால் உதயநிதியும், சபரீசனும்தான். அதிகாரிகளை எல்லாம் மிரட்டுவது உருட்டுவது சபரீசன் தான். அவர் நிழல் முதல்வராக உள்ளார். அமைச்சரவையில் 11வது இடத்தில் இருக்கும் உதயநிதி, முதலமைச்சர் நடத்த வேண்டிய அனைத்து துறை ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.
துரைமுருகன் ஆயிரம் தப்பு செய்து இருக்கலாம். ஆனால் அவர் கலைஞருக்கு அரணாக இருந்தவர் அல்லவா? எம்.ஜி.ஆர் தான் துரைமுருகனைப் படிக்க வைத்து, அவர்க்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அந்த எம்.ஜி.ஆரையே உதறி விட்டு, கலைஞருக்கு பக்க பலமாக இருந்த, துரைமுருகனை நீ முன்னிலைப் படுத்த வேண்டாமா? மாவட்டந்தோறும் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
உங்க ஆட்சியில் 2023ஆம் ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 25 பேர் செத்தனர். இந்த வருடம் கள்ளக் குறிச்சியில் 75 பேர் செத்தனர். உங்க ஆட்சியில் இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் நடந்துள்ளன. தமிழ்நாடே போதை மாநிலமாக உள்ளது” என்றார்.