நாம் மக்களோடு நிற்போம்! மக்கள் பிரச்சனைக்காக நிற்போம்!.. மாஸ் காட்டிய திருமாவளவன்
ஒற்றை கோரிக்கை, 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென் இந்திய வழக்கறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திருமா நம்மோடு இருக்கிறார் என்று உரிமையோடு பேசினார் சகோதரர் இன்பதுரை. ஒற்றை கோரிக்கை, இந்த மூன்று சட்டங்களும் திரும்ப பெற வேண்டும் என்பது தான். இதில் ஒத்த கருத்து தான். அகில இந்திய அளவில் இதை எடுத்த செல்ல வேண்டும். போராட்டம் மூலம் இதை திரும்பப் பெற வைக்கலாமா என்று நாம் நம்ப வேண்டும்.. நடைமுறைக்கு வந்து விட்டதால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. சாதாரண மக்கள், விவசாயிகள், நாடாளுமன்ற ஜனநாயகப் பற்றி எந்த விவரமும் அறியாத மக்கள் இந்த சட்டம் எதிராக இருக்கிறது என்று தெரிந்து வேளாண் சட்டங்களை எதிர்த்து மக்கள் போராடினார்கள். ஓராண்டுக்கு மேல் போராடினார்கள். அப்படி ஒரு போராட்டம் ஜனநாயக அரசுக்கு எதிராக நடந்திருக்குமா? என்றால் தெரியவில்லை. பஞ்சாப் விவசாயிகள் குடும்பம் குடும்பமாக வந்து போராட்ட இடத்தில் தங்கி, சமைத்து உண்டு அங்கேயே தங்கினர். அதை நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது. அது ஒரு அறவழி போராட்டம்.
நான் போராட்டம் களத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். போராட்டத்தளத்தில் தங்கி இருக்க வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு புரட்சி! அமைதி புரட்சி! நடைமுறைக்கு வந்த சட்டங்களை, ஒரு ஆண்டுக்கு மேல் நடைமுறையில் இருந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்தார்கள். நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது அது. அவர்கள் யாரும் எம்.பிகள், எம்எல்ஏக்கள் கிடையாது சாதாரண மக்கள். மக்களே தடுப்பு சுவராக நின்று நடத்திய ஒரு போராட்டம். கொஞ்சம் கூட தளரவில்லை. மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராடுவோம் என்று விவசாயிகள் சொன்னார்கள். சாதாரண மக்கள் மத்தியில் போராடக்கூடிய உணர்வு எப்படி இருக்கு என்று நேரில் பார்த்தோம். தேர்தல் காலத்தில் இந்த சட்டங்களை திரும்பப்பெற்றார்கள் என்றாலும் கூட அதற்கான நெருக்கடியை மக்களால் தர முடிந்தது. அவர்கள் போராடாமல் இருந்தால் அரசு திரும்ப பெற்றிருக்காது.
வழக்கறிஞர்களுக்கு நன்றாகவே புரியும். இந்த சட்டங்களால் யார் யாருக்கு பாதிப்பு என்று. அரசியல் ரீதியாக நாம் அணுகுவது ஒரு புறம் இருந்தாலும், சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியது ஒன்று. மீண்டும் அதே உறுதியை தர கடமைப்பட்டிருக்கிறேன், நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும், உங்களோடு களத்தில் இருப்போம்! மக்களோடு இருப்போம்! அன்பு சகோதரர் இன்பத்திற்கும் இதுதான் பதில். கட்சிகளோடு அல்ல, மக்களோடு நிற்போம்! எந்த அடையாளமாக இருந்தால் என்ன அடையாளம் முக்கியமல்ல. கட்சி, ஜாதி, மத அடையாளம் இவற்றையெல்லாம் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் நாம் பக்குவப்பட வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம். உங்கள் கொள்கை உங்களுக்கு எனது கொள்கை எனக்கு. தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறு. அது வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டது. கட்சி நலனை அடிப்படையாகக் கொண்டது. அந்த நேரத்திற்கான காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டது. முரண்பாடான முடிவுகளை கூட எடுக்க நேரும். அது ஒரு கட்சிக்கு நேரும். நாம் மக்களோடு நிற்போம்! மக்கள் பிரச்சனைக்காக நிற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?