சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்துப்பாடல் தவறாகப் பாடப்பட்டது ஏற்புடையதல்ல, இனிவரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் இல்லாதவாறு பாடுவதற்கு சரியாக, முறையாக ஒத்திகை நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்துவோர் ஒத்திகை நடத்தி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை சரியாகப் பாடி தமிழுக்கு உரிய பெருமை சேர்க்க வேண்டும். எனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடுவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் செயல்படும் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில், எதிர்ப்பையும் மீறி இந்தி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது மோடி அரசு. மற்ற தேசிய மொழிகளை புறக்கணித்து இந்தியை மட்டும் கொண்டாடுவது, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றுள்ளார். அதில் ஒலிக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்த்துவிட்டு பாடியுள்ளனர்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் பல்வேறு மேடைகளில் தென்னக அரசியல் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தி வந்த ஆளுநர் இப்போது இந்த அவமதிக்கும் வழிவகுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவியை, பதவிக்காலம் கடந்தும் அதே பொறுப்பில் தொடர்ந்து வைத்துள்ளது மோடி ஆட்சி - ஆர்.எஸ்.எஸ் கொள்கையை இதன் மூலம் திணிக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். ஆளுநர் ரவியின் போக்கை கண்டிப்பதுடன், அவரை திரும்பப்பெற வேண்டுமென சி.பி.ஐ.(எம்) சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.