திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். தங்களது சொந்த கார்கள், வேன்கள், பேருந்துகளில் தவெக தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்தனர். அப்போது திருச்சியில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது. திருச்சியைச் சேர்ந்த சீனிவாசன், கலை உள்ளிட்ட சிலர் அவர்களது காரில் பயணித்தனர். அப்போது உளூந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதியதில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் சீனிவாசன், கலை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் மாநாட்டுக்கு கிளம்பிய தவெக தொண்டர்கள் இருவரும் விபத்தில் பலியாகினர். மாநாட்டுக்குச் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விபத்தில் பலியானது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால், நேற்று மாலையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் பலியான தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.
சுமார் 45 நிமிடங்கள் வரை மேடையில் உரை நிகழ்த்திய அவர், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலோ சொல்லவில்லை. இதனை குறிப்பிட்டு பலியான தவெக தொண்டர்களின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சின்ன வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்கள் அவர்கள். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது முதல் அக்கட்சிக்காக உழைத்து வந்தவர்கள் மாநாட்டுக்குச் செல்லும் போது விபத்தில் பலியாகிவிட்டனர். இதுபற்றி எதுவுமே தெரியாதது போல தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் இழப்பீடு கேட்கவில்லை, ஒரு இரங்கல் தெரிவிக்கக் கூட மனமில்லையா என கேள்வி எழுப்பினர்.
ஆனால், விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலோ சொல்லவில்லை. ஒரு இரங்கல் அறிக்கைக்கூட வெளியிடவில்லை, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து சற்று நேரத்திற்கு முன்பு, தவெக பொதுச்செயலாளர் திருச்சி சென்று விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் மிக முக்கியமான தொண்டர்களை இழந்துவிட்டது. இவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது, அதேநேரம் பலியானவர்களின் குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் பார்த்துக்கொள்ளும் எனக் கூறினார்.