ஆர்.என்.ரவி கூறியது சுத்த அயோக்கியத்தனம்! - கே. பாலகிருஷ்ணன் காட்டம்
பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தொடர்ந்து பத்து நாட்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆர்டிஓ மீது தமிழக அரசு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்களின் தந்தைக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கிய பிறகு அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் வழங்குவது தானே முறை. அதை விடுத்து அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைப்பது எந்த வகையில் நியாயம்? இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்தியாவில் வேலை வாய்ப்பில் 8 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ள பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படும். இவர்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எஸ்டி சான்றிதழ் பெற்ற பழங்குடியின மக்கள் தமிழகத்தில் வேலை பெற்று வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆகையால் இவர்களின் பொருளாதாரம் பாதிப்படையும். இதை முதல்வர் கவனத்தில் கொண்டு இவர்களுக்கு உடனடியாக எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் மதுரை ஆர்டிஓ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வாக்கு வங்கியாக பழங்குடியின மக்கள் பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் ரவி கூறியது சுத்த அயோக்கியத்தனம். மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பழங்குடியின மக்களால் எந்த ஒரு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. ஆகையால் இவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இது குறித்து முதல்வரை சந்திக்கும்போது கோரிக்கையாக வைத்து இவர்களுக்கான நீதி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாளையே முதல்வருக்கு கோரிக்கை மனுவாக வழங்கப்படும். மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளியில் மனு அளித்துள்ள 135 பேரின் கோரிக்கைகள் குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?