Milan Rathnayake : ஆரம்பமே அசத்தல்.. 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சாதனை..

Sri Lanka Player Milan Rathnayake Test Record : 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில், 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்து, இலங்கை வீரர் மிலன் ரத்நாயகே சாதனை படைத்துள்ளார்.

Aug 23, 2024 - 08:55
Aug 24, 2024 - 10:04
 0
Milan Rathnayake : ஆரம்பமே அசத்தல்.. 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சாதனை..
அறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்த மிலன் ரத்நாயகேவை பாராட்டும் தனஞ்செயா டி சில்வா

Sri Lanka Player Milan Rathnayake Test Record : இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டிமுத் கருணரத்னே 2 ரன்களிலும், நிஷன் மதுஷ்கா 4 ரன்களிலும், ஏஞ்சலோ மாத்யூஸ் டக் அவுட் ஆகியும் வெளியேற, இலங்கை அணி 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து, குஷல் மெண்டிஸ் 24 ரன்களிலும், தினேஷ் சண்டிமால் 17 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 12 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால், இலங்கை அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், அணியின் ஆபந்தவானாக களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 74 ரன்களை எடுத்து அணியின் வீழ்ச்சியை தடுத்தார்.

அதே சமயம் தனது அறிமுகப் போட்டியில் 9ஆவது வீரராக களமிறங்கிய மிலன் ரத்நாயகே அபாரமாக ஆடினார். 135 பந்துகளை சந்தித்த மிலன், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்தார். இதனால், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக, 1983ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 41 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்களுடனும், கஸ் அட்கின்ஸன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

9ஆவது வரிசையில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:

வீரரின் பெயர் ரன்கள் ஆண்டு எதிரணி
மிலன் ரத்நாயகே [இலங்கை] 72 2024 இங்கிலாந்து
பல்விந்தர் சந்து [இந்தியா] 71 1983 பாகிஸ்தான்
டேரன் காஃப் [இங்கிலாந்து] 65 1994 நியூசிலாந்து
மாண்டே ஷோண்டேகி [தெ.ஆப்பிரிக்கா] 59 2003 இங்கிலாந்து
வில்ஃப் பெர்குசன் [வெஸ்ட் இண்டீஸ்] 56 1948 இங்கிலாந்து

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow