அரசியல்

Senthil Balaji : கரூரில் ரீ-எண்ட்ரி கொடுத்த செந்தில்பாலாஜி... அடுத்தது நடக்கப்போவது என்ன?

Senthil Balaji in Karur : சிறையில் இருந்து ஜாமினில் வந்து, தற்போது அமைச்சராகியுள்ள செந்தில்பாலாஜி, திடீரென கரூருக்கு விசிட் அடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. 

Senthil Balaji : கரூரில் ரீ-எண்ட்ரி கொடுத்த செந்தில்பாலாஜி... அடுத்தது நடக்கப்போவது என்ன?
Senthil Balaji in Karur

Senthil Balaji in Karur : அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுப்பட்டதாகக் கூறி செந்தில்பாலாஜிமீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக ஆட்சிக் காலத்தில் கைதாகி, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளியில் வந்த கையோடு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று தன்னுடைய பவரை நிரூபித்துள்ளார் செந்தில்பாலாஜி. 

இந்தளவிற்கு செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவின் கிங் மேக்கராக செந்தில்பாலாஜி உருவெடுத்துவிட்டதுதான். அதற்கு சிறந்த உதாரணம் மக்களவை தேர்தல். சிறையில் இருந்துக் கொண்டே நண்பர் சங்கர் ஆனந்த் மூலம் கரூரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் செந்தில்பாலாஜி. 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, ‘செந்தில்பாலாஜி அவ்வளவு தான்... கரூருக்கும் கோவைக்கும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்களை போட வேண்டும்...’ என்று தன் ஆதரவாளர்களை உசுப்பேற்றிவிட்டு மீசைக்கார சீனியர் அமைச்சர் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, கோவைக்கு வேண்டுமானால் நியமித்துக் கொள்ளுங்கள்... கரூருக்கு நான் வரும்வரை பொறுப்பு அமைச்சரோ, பொறுப்பு மாவட்டச் செயலாளரோ போட வேண்டும் என்று தலைமையிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தலைமையும் அதற்கு ஓகெ சொல்லி கரூர் மீது கை வைக்கவில்லை. அதற்கான பரிசாக மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை பரிசாக வழங்கினார் செந்தில்பாலாஜி என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜி திமுகவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை களையெடுப்புடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கரூருக்கு விசிட் அடித்துள்ளார் செந்தில்பாலாஜி. கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பயணியர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில்பாஜியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கரூருக்கு வந்துள்ள செந்தில்பாலாஜி ஜெயில் தான் இருந்தபோது தனக்கு எதிராக செயல்பட்ட கறுப்பு ஆடுகளை களையெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரூரில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு செந்தில்பாலாஜி ஸ்கெட்ச் போட்டுள்ளதாக் கூறப்படுகிறது.