அரசியல்

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

ம.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மதுவை ஒழிக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு என்பது சரியான கோரிக்கை தான். மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதியாக உள்ளது. இந்தியாவின் நிதி வருவாயில் அதிக அளவில் கொடுப்பதில் தமிழகம் தான் 2ஆம் இடத்தில் உள்ளது.

தேசிய அளவில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியது ஏற்புடையதல்ல. எந்த கோரிக்கை வைத்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும் என்று மாற்றி விடுவது எல்லாம் ஏற்க முடியாது.

மதுக்கடைகளை திறந்தது யார்? நீங்கள் அதை மூடுவதில் என்ன பிரச்சினை? அடுத்த காந்தி ஜெயந்தியில் மதுக்கடைகளை மூடுவேன் என்று தற்போதைய முதல்வர் முன்பு கூறினார். அவர் சொன்ன பிறகு எத்தனை காந்தி ஜெயந்தியை கொண்டாடி விட்டோம்.

கலைஞரின் பேரன், ஸ்டாலினுக்கு பிறந்த மகன் என்ற ஒரு தகுதியினாலே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆக்கி இருக்கிறார்கள். தனக்குப் பிறகு தன் மகனுக்கு பதவி கொடுப்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டிலேயே சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் சனாதானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.