IND vs BAN 2nd Test : ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது!.. முடிவோடு களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்

IND vs BAN 2nd Test : இந்தியாவின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

Oct 1, 2024 - 14:47
Oct 1, 2024 - 22:12
 0
IND vs BAN 2nd Test : ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது!.. முடிவோடு களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம்

IND vs BAN 2nd Test : வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தொடங்கி நடைபெற்றது. இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி (IND vs BAN 2nd Test Match) செப்டம்பர் 27ஆம் தேதி, கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறிக்கிட்டதால் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

அதனை தொடர்மழை காரணமாக தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம், 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், 4ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகப்பட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்களும், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, போட்டியில் முடிவு காணும் நோக்கத்தோடு ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால், 3 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்து சாதனை படைத்தது.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணியால் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்து இருந்தது. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100, 150, 200, 250 என சாதனை படைத்து ராக்கெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது.

இதனால், இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது, இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72 ரன்களும் [51 பந்துகள்], கே.எல்.ராகுல் 68 ரன்களும் [43 பந்துகள்], விராட் கோலி 47 ரன்களும் [35 பந்துகள்], சுப்மன் கில் 39 ரன்களும் [36 பந்துகள்], எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிடி ஹசன் மிரஷ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. ஜாகிர் ஹசன் 10 ரன்களிலும், ஹசன் மஹ்முத் 4 ரன்களிலும் அஸ்வின் பந்தில் வெளியேறினர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வங்கதேச அணியை வெளியேற்றி, வெற்றி இலக்கை எட்டும் நோக்கத்தில் இந்திய அணி விளையாடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow