அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘திராவிடம்’ என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொந்தளிப்பவர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் இருப்பதற்கு கோபம் வரவில்லை. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது” என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கக்கூடிய முத்தமிழ் பேரவையில் திமுக தொண்டரணி சார்பில் கலைகளின் இதயம் கலைஞர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “சீமான் தமிழ் நாட்டின் மக்களின் மத்தியில் ஏதோ குழப்பம் செய்ய வேண்டும் என்பதாக பேசி வருகிறார். தமிழ் தாய் வாழ்த்து என்பது, திமுக ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர், கலைஞர் எழுதியது அல்ல. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய கவிதை 50 ஆண்டு காலமாக இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடி வரப்படுகிறது.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? திருமாவளவன் திமுக முதல்வர்தான் இருக்க வேண்டும் எனக் கூறிய பிறகு அது குறித்தான கேள்வி எழவில்லை தளபதி தான் முதல்வராக வர வேண்டும் என பலமுறை சொல்லி இருக்கிறார். திருமாவளவன் சீமான் வலை போட்டு இழுக்கலாம் என பார்க்கிறார். அந்த அபாய வழியில் திருமாவளவன் சிக்க மாட்டார் 

எங்களுக்கு ஆளுநர் கிடையாது. ஆளுநரின் பதவி காலம் முடிந்துவிட்டது. அவருடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். எப்பொழுது செல்கிறார் என தேதி மட்டும் தான் அறிவிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இன்னொரு ஆளுமை பதவி ஏற்கும் வரை அவர் ஆளுநராக இருக்க வேண்டும் என்று இருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி என்றால் 62 வயது வரை இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் 65 வரை இருக்க வேண்டும். கவர்னர் இல்லையென்றால் அந்த மாநிலத்தில் தலைமை நீதிபதி ஆளுநராக செயல்பட வேண்டும் என இருக்கிறது. கேசுவல் லேபர் போல் ஆளுநர் தற்போது செயல்பட்டு வருகிறார்” என்றார்.