2,327 அரசு பணியிடங்களுக்கு 7,93,966 பேர் போட்டி.. ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Sep 19, 2024 - 14:48
 0
2,327 அரசு பணியிடங்களுக்கு 7,93,966 பேர் போட்டி.. ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!
MK Stalin And Ramados

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களை தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அதாவது உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடந்தன.

மொத்தம் 2,327 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 7,93,966 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களுக்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில்,  அரசு பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ’’தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம்  தொகுதி  (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11-ம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத்  திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow