பாவம் சின்ன பையன் விஜய்.... வளர விடுங்கப்பா... செல்லூர் ராஜு பேட்டி!
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு தலைமையில் ஜான்சி ராணி பூங்காவில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “கடந்த 23ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏர் ஷோ சென்னையில் நடைபெற்றது அப்போது முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த முறை நடைபெற்றுள்ள உயிரிழப்புகள் திமுக அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து திமுக ஆட்சியில் மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தபோது மூன்று பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் 2 லட்சம் அல்லது ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்குகின்றனர். ஆனால் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கூட 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டது. போதை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 என பல முறை நடவடிக்கை எடுப்பதாக சொல்கின்றனர். ஆனால் தொடர்ந்து போதைப் பொருட்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. போருக்கு போவது போன்று பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் எலி பிடிப்பதை போன்று பாஜக குறித்து கேள்வி கேட்கிறீர்கள். முறையான திட்டமிடல் இல்லாமையும், காவல்துறை பற்றாக்குறையின் காரணமாக ஏர் ஷோ நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது. மக்கள் நிம்மதியாக இல்லை என்று ஆளுநர் கூறுவது உண்மைதான்.
நடிகர் விஜய் இப்போதுதான் மாநாடு நடத்தப் போகிறார். அதிமுக உருவானபோது எம்ஜிஆருக்கு ஆதரவாக கோடான கோடி மக்கள் திரண்டிருந்தனர். நடிகர் விஜய் நடக்கவிருக்கும் மாநாட்டில் தனது கொள்கைகளை வெளியிட்ட பிறகுதான் மக்கள் அதற்கு ஆதரவு கொடுப்பார்களா இல்லையா என்பதை தெரியவரும். பாவம் சின்ன பையன் விஜய். அவர் வளர கூடாதா? அவரையும் தடுக்குறீங்க..? அதற்காக அதிமுகவிற்கு போட்டியா என்று கேட்பது சரியல்ல. உண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள தொண்டர்கள் பெரும்பாலானோர் திமுகவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. எனவே திமுகதான் விஜய் கட்சி தொடங்குவதால் பாதிக்கப்படும். விஜய் கட்சி தொடங்குவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று பேசினார்.
What's Your Reaction?