ஏற்காட்டில் வானிலை ரேடார் தேவை... அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சேலம் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த இந்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டப்படும் தாமதமும், அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.
சேலம் கமலாபுரத்தில் கடந்த 1993&ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விமானநிலையம் கடந்த 30 ஆண்டுகளில் எட்டியுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். தொடக்கத்தில் பயணிக்க ஆளில்லாததால், தங்களின் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் மறுத்த நிலை மாறி, இப்போது சென்னை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரங்கள் மட்டுமின்றி, தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கும் நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால், அதை சாத்தியமாக்கும் வகையில் சேலம் விமான நிலையம் தான் இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.
2008&09ஆம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியிலும், 2018&ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியிலும் சேலம் விமான நிலையத்தை விரிவாக்குவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நிலங்களை கையகப்படுத்த மக்களின் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் வகையில் 654 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது.
விமான நிலையத்திற்கான நிலங்களைக் கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக திட்டமிட்டு ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில், நிலங்களை கையகப்படுத்த எந்த உழவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, 2013&ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்திற்கான சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தான் உழவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். சேலம் விமான நிலையத்திற்காக நிலங்கள் கையகப் படுத்தப்படவுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.80 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை விற்பனையாகும் நிலையில் அதற்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை உழவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். உழவர்களை அழைத்து பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எந்தத் தடையும் இல்லை.
சேலம், தர்மபுரி, நாமக்கல், உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பயணிகள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் இப்போது சேலம் விமான நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால், கோவை அல்லது பெங்களூர் சென்று தான் விமானத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. சேலம் விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், திருப்பதி, மும்பை, தில்லி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் தயாராக இருப்பதால் சேலம் விமான நிலையமும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க வகைகளில் முன்னேற்றம் அடையும் என்பது உறுதி.
தமிழக அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து கொடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. விமான ஓடுபாதையின் நீளம் இப்போதுள்ள 6000 அடியிலிருந்து 8000 அடியாக அதிகரிக்கப்பட்டால் போயிங் 737, ஏர்பஸ் 320 வகை விமானங்களைக் கூட தரையிறக்க முடியும். ஓடுபாதை மேலும் விரிவாக்கப்படும் போது ஏர்பஸ் 350 வகை வானூர்திகளும் சேலத்திற்கு வந்து செல்வது சாத்தியமாகும். அத்தகைய சூழலில் எதிர்காலத்தில் சேலம் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
இவை அனைத்தையும் விட சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், செயல்திறனுக்குமான முதன்மைத் தேவை அதற்கு வானிலை முன்னெச்சரிக்கைகள் துல்லியமான கிடைப்பதை உறுதி செய்வது தான். வழக்கமாக வானிலையை அறிய பயன்படும் ரேடார்கள் 200 கி.மீ சுற்றளவில் உள்ள வானிலையைத் தான் துல்லியமாக கணிக்கும். ஆனால், சேலம் விமான நிலையம் சென்னையிலிருந்து 350 கி.மீ தொலைவில் இருப்பதால் அங்கு நிலவும் வானிலையை துல்லியமாக கணிக்க முடிவதில்லை. இக்குறையை போக்க ஏற்காட்டில் வானிலை ரேடார் ஒன்றை நிறுவினால் சேலம், கோவை விமான நிலையப் பகுதிகளில் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வானிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
எனவே, உழவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் நிலங்களை விரைவாக கையகப்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை உடனடியாகத் தொடங்கி குறித்த காலத்தில் முடிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அத்துடன் ஏற்காட்டில் வானிலை ரேடார் அமைக்கவும் அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?