இந்தியா

'கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்'.. மகாராஷ்டிராவில் உருகிய பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.

'கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்'.. மகாராஷ்டிராவில் உருகிய பிரதமர் மோடி!
PM MODI

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வன் என்ற இடத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டை பகுதியில் சத்ரபதி சிவாஜிக்கு 35 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்திய கடற்படை தினத்தில் இந்த சிலையை பிரதமர் மோடி நேரில் திறந்து வைத்திருந்தார்.

பல மாதங்களாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. கனமழை மற்றும் கடுமையான காற்று காரணமாக சிலை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியே நேரில் வந்து திறந்து வைத்ததால் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது நாடு முழுவதும் பேசும்பொருளானது.

சிவாஜி சிலை கட்டுமானத்தின் தரம் குறித்து காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன், ஏக்நாத் ஷின்டே தலைமையிலான அரசு சிலையை பராமரிக்க தவறி விட்டது எனவும் குற்றம்சாட்டின. 

இதற்கிடையே சிலை உடைந்தது குறித்து விளக்கம் அளித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ''மகாராஷ்டிராவின் காவல் தெய்வமான சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சிலை கடற்படையால் நிறுவப்பட்டது. மணிக்கு 45 கிமீக்கு மேல் வலுவான காற்று வீசியதன் காரணமாக சிலை உடைந்து விழுந்துள்ளது. சிலை உடைந்தது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 'சத்ரபதி சிவாஜியின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்பு இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது தொடர்பாக கடவுள் சத்ரபதி சிவாஜியின் காலடியில் எனது தலை வைத்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல அல்லது அரசர் மட்டுமல்ல; அவர் நமது கடவுள். ஆகவே எனது கடவுளிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

ஏனெனில் நமக்கு கடவுளை விட உயர்ந்தது வேறு ஒன்றும் இல்லை. இதேபோல் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததால் மனம் உடைந்த மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாஜகவினரால் கொண்டாடப்படும் வீர் சாவர்க்கரை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார். 

இது தொடர்பாக ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.