இந்தியா

பெரியார் vs பிரபாகரன் சர்ச்சை யாழ்ப்பாணத்திலும் தொடரும் பிரச்னை ராச்குமார் மீது தாக்குதல் முயற்சி?

பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல போட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்தது நான் தான் என பிரளயத்தை கிளப்பிய இயக்குநர் சங்ககிரி ராச்குமார் மீது இலங்கையில் தாக்குதல் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்தது என்ன? அங்கு இயக்குநர் ராச்குமார் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பெரியார் vs பிரபாகரன் சர்ச்சை யாழ்ப்பாணத்திலும் தொடரும் பிரச்னை ராச்குமார் மீது தாக்குதல் முயற்சி?
பெரியார் vs பிரபாகரன் சர்ச்சை யாழ்ப்பாணத்திலும் தொடரும் பிரச்னை ராச்குமார் மீது தாக்குதல் முயற்சி?

பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படத்தை நண்பர் செங்கோட்டையனுக்காக நான்தான் போட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்தேன் என்று பேட்டி அளித்து பெரும் பிரளயத்தை கிளப்பியவர் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் சீமானின் தம்பிகள் இவரை தேடி வரும் நிலையில், இலங்கை சென்றுள்ளார் ராச்குமார். அங்கு ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு ராச்குமாரை தாக்குதல் நடத்த திட்டமிட்ட விவகாரம்தான் சமூக வலைதளத்தில் செம வைரல் என்ன நடந்தது?” என்று ராச்குமாரை தொடர்புகொண்டு கேட்டோம். "தற்போதுள்ள சூழலில் சீமானின் பெரியார் மற்றும் பிரபாகரன் தொடர்பான கருத்துகள் குறித்து இளைஞர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். மேலும் போர் சூழலில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய பிரிவினர் எப்படி அணுகப்பட்டனர் என்பதை அறியவும். போருக்குப் பிறகான அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறியவும் ஈழத்தில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் நேரில் வரும்படி அழைத்தனர். இதையடுத்து, பிப்ரவரி 3ம் தேதி இலங்கை சென்றேன். 

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வெளியே இருந்த ஒளவையார் சிலையைக் கண்டதும் ஆர்வத்துடன் அதன் அருகே சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த ஒருவர், நீங்கள் திரைப்பட இயக்குநர் ராச்குமார்தானே? என்று கேட்டார். 'ஆமாம்' என்றதும் அந்த நபர் அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று அங்கிருந்த தனது நண்பரையும் கூட்டி வந்து, 'இவன்தான் பெரியாருக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பவன்' என்றவர், தொடர்ந்து தொலைபேசியில் யார் யாரையோ அந்த இடத்துக்கு வரவழைத்தார். அவரது பேச்சில் ஒருவகையான மூர்க்கத்தனம் தெரிந்தது. அந்த இடத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் அவர் செயல்படுகிறார் என்பது புரிந்தது" என்றார்.

தொடர்ந்து பேசிய ராச்குமார், “அவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால், ஈழத்தில் நாம் தமிழர் கட்சிக்கு என்று ஒரு அமைப்போ, செயல்பாடோ எதுவும் கிடையாது என்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள இளைஞர்கள் தமிழக தொலைக்காட்சிகளையும் இணைய ஊடகங்களையும் பார்த்ததன் அடிப்படையில் சீமான் பேசிய  பேச்சைக் கேட்டு பிரபாகரனை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தவர்களுக்கு பெரியார் ஒரு எதிரியாகப்பட்டிருக்கிறார். சீமான் தான் அவருக்கு ஆதரவாக பேசுகிற மாதிரியும் பெரியார் வந்து அவருக்கு எதிராக இருக்கும் மாதிரியான ஒரு மனநிலையும் உருவாகியிருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் பெரியார் மேடைகளின் மூலமாகத்தான் சீமானுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. பெரியார் இயக்கங்களின் தலைவர்கள் மூலமாகத்தான் ஈழத்துக்கே அவர் செல்ல முடிந்திருக்கிறது. சீமான் தன்னுடைய சுயநலத்துக்காக பெரியாரையும், அவரையும்  தனித்தனியே பிரித்து வைப்பது அவர்கள் இருவரையும் ஒருவருக்கெதிராக நிறுத்தி வைப்பது போன்ற செயல்களைச் செய்து வருகிறார். இது ஆரோக்கியமான போக்கே கிடையாது. 

பெரியார் பற்றி பேசுகிறேன் என்பதற்காக என்னை சிலர் வம்பிழுத்ததை கேள்விப்பட்ட யாழ் நகரத்து தமிழுணர்வாளர்கள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு பேசி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தாயக மக்கள் உரிமைக் கழகம் என்றொரு கட்சியை நடத்தி வரும் நண்பர் எம்ஜேபி என்பவர் என்னிடத்தில் பேசும்போது தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெரியார் புகைப்படத்தை அகற்றும்படியும் ஒரு கன்னடனின் புகைப்படத்தை நீங்கள் வைத்திருக்கக் கூடாது என்று சிலர் மிரட்டல் தொனியில் சொல்லிவிட்டுச் சென்றதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்" என்றவர். யாழ்ப்பாணத்தில் பெரியாருக்கு சிலை அமைக்கக் காரணம் என்ன என்பதை விவரித்தார். 

'யாழ்ப்பாணம் பேருந்து நிலைய சாலையோரப் பகுதிகள் முழுவதுமே திருவள்ளுவர், கம்பர், பாரதியார், சோமசுந்தர பாரதியார் போன்றோரின் சிலைகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண நகரைச் சுற்றிலும் தமிழர் அல்லாத காந்தியடிகள், லெனின், காரல் மார்க்ஸ் ஆகியோரது சிலைகள் அவர்களது கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் மதிப்பு தரும் வகையில் நிறுவப்பட்டுள்ளன. இவர்களைத் தவிர தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையும் கூட உள்ளது. ஆனால் சமூகநீதிக்காகப் போராடிய பெரியாரது சிலை அங்கில்லை! 

பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிர் துருவத்தில் நிறுத்தி வார்த்தைகளாலும் வீடியோக்களினாலும் செய்த மூளைச் சலவை இலங்கை மக்களின் ஒரு பகுதியினரின் மனநிலையில் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களது புரிதலுக்காவது அங்கு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட வேண்டும். எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வுகள் உள்ளனவோ, அங்கெல்லாம் பெரியார் தேவை. அந்த வகையில் ஈழத்தில் பெரியாருக்கான தேவை இருக்கிறது என்று கருதும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் அங்கே பெரியார் சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண நகரத்தில் முக்கியமான ஓர் இடத்தை தேர்வு செய்து, அரசு அனுமதி பெற்று பெரியார் சிலை நிறுவப்படும்" என்றார்.