நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயராக திமுகவை சேர்ந்த 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தொடர்ந்து 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். 8ம் வகுப்பு வரை படித்துள்ள ராமகிருஷ்ணன் எளிமைக்கு பெயர் போனவர்.
தனக்கு சொந்தமாக சைக்கிள் ஒன்றை வைத்திருக்கும் இவர் கவுன்சிலர் ஆன பிறகு சைக்கிளில் சென்று வார்டு மக்களிடம் குறைகளை கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். நெல்லை மாநகராட்சி கூட்டம் மட்டுமின்றி எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்வதை வழக்கமாக வைத்துள்ள அவர் நெல்லை மேயராக பதவியேற்ற நாளிலும் மாநகராட்சி அலுவகத்துக்கு சைக்கிளில்தான் வந்தார்.
இந்நிலையில், மேயராக பதவியேற்ற பிறகும் ராமகிருஷ்ணன் சைக்கிளை கைவிடவில்லை. தனது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் செல்லும் அவர், தினம்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறதா? குடிநீர் ஒழுங்காக வருகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களிடம் கேட்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். சுகாதார ஆய்வாளர் சிவகுமாரும் தனது சைக்கிளில் மேயருடன் சென்று வருகிறார்.
இன்றும் வழக்கம்போல் சைக்கிளில் சென்ற மேயர் ராமகிருஷ்ணன், 25வது வார்டில் திருநெல்வேலி டவுன் காவல் நிலைய பகுதிக்கு சென்று காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாக இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ''அரசு சார்பில் இன்னோவா கார் கொடுக்கப்பட்டும் ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள்?'' என்று சிலர் மேயரிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், ''அலுவலக வேலைக்கு மட்டும் தான் கார். என்னுடைய வார்டை சுத்தி பார்ப்பதற்கு சைக்கிள் தான் என்னுடைய வாகனம். சைக்கிளில் தொடர்ந்து பயணிப்பதால் தனக்கு பிரஷர் சுகர் எதுவும் இல்லை'' என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார். மேயர் பதவியில் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும்.
இதேபோல் மேயர் ராமகிருஷ்ணனுக்கும் கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காரை அதிகம் பயன்படுத்தாத ராமகிருஷ்ணன் தொடர்ந்து சைக்கிளேயே வலம் வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் சிறு பதவியில் இருந்தாலும் சொகுசு கார்களில் பந்தாவாக பறந்து வருகின்றனர். அதுவும் மேயர் என்றால் செல்லவே வேண்டாம். ஆனால் மேயர் ஆன பிறகும், சொகுசு காரை தவிர்த்து மிகவும் சாதாரணமாக சைக்கிளில் வலம் வரும் ராமகிருஷ்ணனை நெல்லை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.