உதயநிதி நிறைய பேசுகிறார்.... எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடி! - இபிஎஸ் சாடல்
பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி உபரிநீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்ததற்காக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் சேலம் மாவட்டம் மேச்சேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்துகிற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிதான் வாழ்நாளில் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். விவசாய குடும்பத்திலே பிறந்து விவசாய பணிகளை செய்துள்ளேன். ஒரு விவசாயி முதலமைச்சரான பின்னர், இப்பகுதியில் வறண்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் எத்தனையோ அரசாங்கம் வந்த போதிலும் கோரிக்கை நிறைவேறவில்லை. ஆனால், நான் முதலமைச்சரான பின்னர் இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றது. நான் விவசாயியாக இருந்ததால், விவசாயிகள் படும் கஷ்டம் நன்றாக எனக்குத் தெரியும். விவசாயிகள் பிரச்சனைகளை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன். வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பினால் பசுமையான பகுதியாக மாற்ற முடியும் என அவர் வாழ்த்து தெரிவித்தார். துரதிருஷ்டவசமாக அவர் மறைந்து விட்டாலும், அவரின் எண்ணத்தில் உதித்த இந்த திட்டத்தை நிறைவேற்ற எண்ணி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதற்கேற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன்.
திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு பிறகே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வந்து பார்வையிட்டு, நல்ல திட்டம் என்று பாராட்டினார். ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத வறண்ட பகுதிகளுக்கு நீர் நிரப்புவது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் 42 மாதங்களாகியும் திட்டம் நிறைவேறவில்லை. விவசாயிகள் எல்லா கட்சியிலேயும் இருக்கிறார்கள். இதில் ஏன் காழ்ப்புணர்ச்சி. அதிமுகவை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்ல. அனைத்து கட்சிகளையும் சேர்ந்த விவசாயிகளுக்கும் பொதுவாகத்தான் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் முக்கியம். விவசாயிகளின் உயிராக தண்ணீர் இருக்கிறது. வறண்ட பகுதிகள் மழை பெய்யும் போதுதான் மானாவாரி விவசாயம் செய்ய முடியும். இந்த பகுதி விவசாயிகள் செழிப்போடு வளமோடு வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் பாடுபட்டோம்.
திமுக அரசு நினைத்திருந்தால் ஓராண்டில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தினை நிறைவேற்றி இருக்கலாம். இதுவரை 46 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், உபரிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கும் உபரிநீர் திட்டம் செயல்படுத்தக்கூடிய நல்லகாலம் மீண்டும் வரும். அதிமுக ஆட்சிக்காலத்தில் நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பருவமழையில் கிடைக்கும் நீர் முழுமையாக சேகரிக்கப்பட்டது. ரூ.450 கோடி மதிப்பில் ஆதனூர், புகளூரில் ரூ.425 கோடி அமைக்கப்பட்ட தடுப்பணிகளில் திமுக அரசு தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளின் விரோத அரசாக திமுக அரசு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நிறைய பேசுகிறார். நான் பொறாமையில் பேசுவதாக கூறுகிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் நிறைய உள்ளன. எந்த திட்டமும் கொண்டு வராமல், கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. மக்களுடைய பணத்தில்தான் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ.82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன். விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் காலில் போட செருப்பு போட முடியாது நூற்றுக்கணக்கான கோடி செலவு செய்து கார் பந்தயம் நடத்தியது ஏன். இதைக் கேட்டால் கோபம் வருகிறது. அப்பா மகன் இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து பேசிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் தான் நடக்கிறது. நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக் காளான் உதயநிதி ஸ்டாலின். அவர் எங்களுக்கு எதுவும் கற்றுத் தர தேவையில்லை.
50 ஆண்டுகாலம் மக்கள் பணி செய்துள்ளேன். உங்கள் வழியில் நான் வரவில்லை. ஒரு விவசாயி, கிளைச் செயலாளர் நிலையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளேன். நீங்கள் அப்படி வரவில்லை. எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது…. கட்சியில் உழைத்தவர்கள் பலர் இருக்க, கருணாநிதியின் குடும்ப ஆண் வாரிசுகளுக்கு பதவி கிடைக்கிறது. பெண் வாரிசுகளுக்கு அதுவும் கிடையாது. உழைத்து பதவிக்கு வந்திருக்கிறேன். கருணாநிதியின் மகன், பேரன் என்பதால்தான் உங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது. விமர்சனம் தொடர்ந்தால் தக்க பதிலடி கிடைக்கும். செல்வ செழிப்பில் வளர்ந்தவருக்கு இவ்வளவு இருந்தால் உழைத்து களைப்பவர்களுக்கு எவ்வளவு இருக்கும். கொல்லைப்புறம் வழியாக பதவிக்கு வந்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த பதவிக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?