இந்திய அணிக்கு சோதனை.. ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்து அபார சாதனை
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக டேரல் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரியாக பெர்ஃபார்மன்ஸ் செய்யாத விராட் கோலி, இந்த போட்டியிலும், 4 ரன்களில் வெளியேறினார். அதிகப்பட்சமாக, சுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. வில் யங் மட்டும் அரைசதம் (51) கடந்தார். கிளென் பிலிப்ஸ் 26 ரன்களும், டெவன் கான்வே 22, டேரல் மிட்செல் 21 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸை போலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 147 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மா (11), சுப்மன் கில் (1), விராட் கோலி (1), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5), சர்ஃப்ராஸ் கான் (1) என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் சரியான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி சிறப்பாக விளையாடினார். ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இதனால், இந்திய அணி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 64 ரன்களில் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) அஜாஸ் படேல் பந்துவீச்சில் வெளியேறினார்.
பின்னர் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த மண்ணில் படுதோல்வியை தழுவியது.
- இந்திய அணியின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், உள்நாட்டில் மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை ஒயிட் வாஷ் ஆனது கிடையாது. முதல் முறையாக உள்நாட்டில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.
- இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே உள்நாட்டில் ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. 2000ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும், 1980ஆம் ஆண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கிலும் தோல்வியை தழுவியுள்ளது. மேலும், 1983ஆம் ஆண்டிற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சொந்த மண்ணில் 200 ரன்களுக்கும் குறைவான ரன்களை சேஸிங் செய்வதிலும் முதன்முறையாக இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. முன்னதாக, 1987ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 221 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.
- 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. முன்னதாக 1969ஆம் ஆண்டு இதே போன்று இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
- நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மும்பை வான்கடே மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடி, 25 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக இயன் போத்தம் 22 விக்கெட்டுகளை இதே வான்கடே மைதானத்தில் எடுத்துள்ளார்.
What's Your Reaction?