Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சீமான், ''நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் பற்றி தான் அமைச்சர், சொல்ல வேண்டுமா என்ன, அவர் உதயநிதி ஸ்டாலின் பற்றி கூட சொல்லி இருக்கலாம். அப்படி என்றால் சரத்குமார், குஷ்பு, நெப்போலியன் போன்ற நடிகர்களை எல்லாம் ஏன் திமுகவில் சேர்த்துக் கொண்டீர்கள். அறிவாலயத்திற்கு வந்தால் அறிவு வந்து விடுமோ'' என்று கிண்டலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், ''திமுகவை அழிக்க ஒருவர் கூட பிறக்கவில்லை என்று சொல்கிறீர்கள். பிறகு அரசியலில் பிறக்காத எதிரிகளை கண்டு ஏன் பயப்படுகிறார்கள். திமுக அதிகாரத்தில் இல்லாதபோது பேசிய பேச்சை, ஆட்சிக்கு வந்தபின் பேச முடியவில்லை. திமுக சொன்னது எதையும் செய்யவில்லை. ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது; அது அங்கேயே செத்துவிட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இறுதி காலங்களில் காசு கொடுத்துதான் கூட்டத்தை கூட்டினார்கள். காசு கொடுத்து கூட்டம் கூட்டிய நீங்களே நம்பிக்கையாக இருக்கும்போது, தானா கூடும் கூட்டத்திற்கு நான் ஏன் அஞ்சவேண்டும். எனக்கு விழுந்த 36 லட்சம் வாக்குகளில் குறைந்தது 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து தான் விழுந்துள்ளது. அப்பா திமுகவில் இருந்த பிள்ளைகள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்'' என்றார்.
மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தமிழ் புதல்வன் திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான், 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று கூறி இளைஞர்கள் வாக்களிக்க ஒரு ஆண்டுக்கு ரூ.18,000 லஞ்சம் அளிக்கிறார்கள். தமிழ் புதல்வன் திட்டத்தில் உள்ள இளைஞர்கள்தான் அடுத்த தேர்தலில் காஸ்ட்லியான வாக்காளர்கள். இதெல்லாம் ஒரு திட்டமா? அரசு பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதா? 300 பேர் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் 2 கழிவறைகள் தான் உள்ளது. மேற்கூரை இல்லாத பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், அதனை சீரமைக்காமல் கார் ரேஸுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறார்கள்'' என்று பேசினார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடத்த இருக்கும் மாநாட்டுக்கு அரசு இடம் அளிக்கவில்லை என செய்திகள் வருவதாக சீமானிடம் கேட்டபோது, ''விஜய் நடத்திருக்கும் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை. எனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது'' என்று கூறினார். மேலும் 'சீமான் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்' என்று விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் கூறிய சீமான், ''அப்படி என்றால் என்னை பற்றி அவர்கள் பேசுவது சரியா? நான் பேசினால் தான் நீங்கள் காது கொடுத்து கேட்கிறீர்கள். நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார்.