போதையில் காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கு... காவலை நீட்டித்து உத்தரவு
விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.
மும்பையில் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று பெண்ணை கொன்ற வழக்கில், ஏக்நாத் சிவசேனா கட்சி நிர்வாகியின் மகன் மிஹிர்ஷாவுக்கு நீதிமன்றக் காவலை 14 நாட்கள் மும்பை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
மும்பையில் கடந்த 2ம் தேதி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் பால்கர் பிரிவு தலைவராக இருக்கும் ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா, மது அருந்திவிட்டு, கார் ஓட்டி இரு சக்கர வாகனத்தின்மீது மோதினார். இதனால் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த காவேரி என்ற பெண் காரில் 1.5 கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இப்பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜேஷ் ஷா தனது மகனை ஆட்டோவில் அங்கிருந்து புறப்பட வைத்துள்ளார். பிறகு போலீசாரின் கண்களின் சிக்கும்படி, கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்தை காரை ஓட்ட வைத்துள்ளார். இதன்மூலம், தனது மகன் செய்த தவறை மறைக்க ராஜேஷ் ஷா முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து மிஹிர் ஷா கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கு முன்னதாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டு மதுபானங்களை அருந்துவதற்கான வயது வரம்பு 25ஆக உள்ள நிலையில், மிஹிர் ஷாவுக்கு 24 வயதே ஆகியுள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் மிஹிர் ஷா ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மிஹிர் ஷா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?