முதல்வர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேயில்லை... தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோடம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக பதிவு செய்திருந்த 2 பேருக்கான காப்பீடு உதவி கிடைத்துள்ள நிலையில், அதனை அவர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து செவித்திறன் குறைபாடு உடைய பெண் ஒருவருக்கு அதற்கான கருவியை ஏற்பாடு செய்து தருவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தீபாவளி பரிசாக 70 வயதிற்கு மேற்பட்டோர் பயனடையும் விதமாக காப்பீடு திட்டத்தை பிரதமர் வழங்கி இருக்கிறார். 15 நிமிடங்களில் 70 வயதிற்கு மேற்பட்டோர், ஆதார் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்திருந்தால் அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த விதமான வருமான உட்ச வரம்பு இல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கான சேவையை பாரபட்சம் பார்க்காமல் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு அட்டையின் மூலம் 5 லட்சம் வரை பலன் பெறமுடியும், 100 ரூபாய் கூட இல்லாமல் உயிரிழப்புகள் நேர்கிறது. அவர்களுக்கு இந்த காப்பீடு பயனுள்ளதாக இருக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் 60 முதல் 70 வயது உள்ளோருக்கு, கட்டுப்பாடுகள் உடன் கூடியது. ஆனால் இந்த திட்டம் 70 வயதிற்கு மேற்பட்டோர், எந்த விதமான வரம்பு விதிமுறைகளும் இன்றி வழங்கப்படும் ஒன்று.
மேலும், பிரதமரின் காப்பீடு திட்டம், முதல்வரின் காப்பீடு திட்டம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் எனதான் தமிழகத்தில் பேசப்படுகிறது. தெலங்கானாவில் பிரதமரின் காப்பீடு ஏற்றுக்கொள்ளாதபோது, நான் தமிழகத்தில் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இந்த திட்டம் தொடர்பான தகவல்களை பெற்று கொண்டு, தெலங்கானா சென்று நான் இந்த திட்டத்தை கொடுக்க செய்தேன். மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவிகிதம் பணிகள் கூட இன்னும் சென்னையில் நடந்து முடிவடையவில்லை. இன்னும் வரைப்படத்தில் கொடுத்திருப்பது இணைப்பு வழியை கூட அடையவில்லை. எங்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் வெள்ளம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, 2020-ல் ஆரம்பித்து 500 கிமீ கூட இந்த பணிகள் முடியவில்லை. உடனே முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் நாட்களில் மிகப்பெரிய வெள்ளம் வரக்கூடும்.
இன்னொரு பக்கம் சென்ற ஆண்டில் 100 TMC தண்ணீர் கிடைத்தும், 50 TMC தண்ணீர் வீணாக கடலில் கடந்துள்ளது. இவர்களிடம் மழை வெள்ளம் பாதுகாக்க திட்டம் இல்லை, காவேரி நீரை பாதுகாக்க திட்டம் இல்லை. இந்த அரசு மற்றும் திமுக பொறுத்தவரை, தமிழகம் ஆரம்பக்கல்வி மாணவர்கள் சேர்க்கை பின்னடவில் உள்ளது. ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள், ஆளுங்கட்சியை விமர்சனம் செய்துவிட்டு, அவர்களிடம் கூட்டணியில் தான் இருக்கிறேன் எனவும் பேசுகிறார்கள். இவை வேடிக்கையாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஒரு பூங்காவை பார்த்ததும் குளத்தில் அள்ளி, தாமரை ஆகியவை இருந்ததற்கு தாமரையை நீக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். அந்த தாமரை அப்படியே இருக்க வேண்டும். இயற்கையை கூட அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சேகர்பாபு ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து அமரன் படம் விவகாரம் தொடர்பாக பேசிய தமிழிசை, அமரன் படத்தை சர்ச்சை செய்வதை விட, தேச பக்தி, தேசிய என்று தான் பார்க்க வேண்டும் என்றார். இதையடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், “2026-ல் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து பெரிய மாற்றத்தை தமிழகம் சேர்க்க வேண்டும். விஜய் கருத்தைத் தாண்டி, நாங்கள் முதலில் இருந்தே கூட்டணி ஆட்சி குறித்து பேசி வருகிறோம். விஜய் கொஞ்சம் கால் ஊன்ற வேண்டும். பிறகுதான் அவரை பார்க்க வேண்டும். விஜய் ஒரே நாடு ஒரே தேர்தலின் எதிர்ப்பு மற்றும் இல்லை, ஒரே குடும்பம் ஒரே ஆட்சியின் எதிர்ப்பாளர் கூட. திமுக 2026 இல் அதிகாரம் இல்லாதவர்கள். திமுக கூட்டணி சேர்ந்தவர்கள் அதிகாரம் வேண்டும் என்றால் இப்போது இருந்தே சிந்திக்க வேண்டும்” என்றார்.
What's Your Reaction?