“தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவின் கவனம் சிதறாது..” விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த மா சுப்ரமணியன்!
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். திமுக, திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுவதாகக் கூறினார். மேலும், “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரை’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை என பயத்தை காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்” என்றார்.
அதேபோல், “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” என ஒரே போடாக போட்டு திமுகவை பொளந்து கட்டினார். விஜய்யின் இந்த பேச்சு திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விஜய்க்கு திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதன்படி தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனும் விஜய்க்கு தக் லைஃப் கொடுத்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான புதிய கட்டமைப்புகள் தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையிலும் அதற்கான புதிய கட்டமைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் சைதாப்பேட்டையில் உள்ள சென்னை துவங்கப்பள்ளிக்கு, புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்பறைகள் வாகன நிறுத்தும் இடம், கழிவறை, சத்துணவுக் கூடம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்ற பல்வேறு வசதிகள் 5400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுவதாக திமுக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்ரமணியன், திமுகவில் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்கள் சரி திமுகவை பற்றி அறிந்தவர்கள். ஆனாலும் திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழ்நாட்டுக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சிப் பணிக்கு ஒரு சிறு துரும்பை கூட எடுத்துப் போட்டிருக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சைதாப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட சாலை வசதிகள், குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டிய அமைச்சர் மா சுப்ரமணியன், திமுக அரசு பொறுப்பேற்ற சைதாப்பேட்டையில் செயல்படுத்திய திட்டங்களை மட்டும் பட்டியலிட்டால் அதற்கு நீண்ட நேரமாகும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சிப் பெற்றுள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதையாது சிதறாது என்று கூறினார்.
What's Your Reaction?