வன்புணர்வுக்கு ஆளான 4 வயது சிறுமிகள்; மகாராஷ்டிராவில் வெடித்த போராட்டத்தால் பரபரப்பு
மகாராஷ்ராவில் 4 வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தூய்மை பணியாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு கடந்த 12ம் தேதி 4 வயது சிறுமிகள் இருவர் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தூய்மைப் பணியில் ஈடுபாட்டிருந்த 23 வயது நபர் அக்ஷய் ஷிண்டே, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர், தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாகத் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, பள்ளி தூய்மைப்பணியாளர் சிறிமியை வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் பெற்றோரை தொடர்புகொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். ஆனால் போலீசார் தரப்பில் புகாரை வாங்க தாமதப்படுத்தியதோடு விசாரணை மேற்கொள்ள முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்களின் தொடர்ந்து வலியுறித்தலின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்தனர்.
இதன் பின்பு சிறுமிகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. பள்ளியில் சிறுமிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும் பள்ளியில் உள்ள பாதி CCTV கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!
இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (ஆகஸ்ட் 20) போராட்டத்தில் குதித்தனர். தானே, பத்லாபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி 100க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தடுக்க வந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மேலும் சிலர் பள்ளியை சூறையாடினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது.
What's Your Reaction?