புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு... மத்திய அரசுக்கு எதிராக வழக்கு... திமுக ஆவேசம்!
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலே இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அமைந்துள்ளன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென் இந்திய வழக்கறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கக்கூடிய ஒரே ஒற்றுமை பாரதிய ஜனதா என்ற தலைப்பு. இந்த பாரதிய ஜனதா என்ற ஒற்றுமையை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இந்த குற்றவியல் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ளது. இந்தியா கூட்டணி நாடும் முழுவதும் பரவி விடக் கூடாது என்பதற்காக இந்திய குற்றவியல் சட்டங்களில் இருக்கும் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி பாரதிய ஜனதா என்ற தலைப்பில் உள்ள புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக இச்சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து கட் அண்ட் பேஸ்ட்(Cut and Paste )செய்து புதிய குற்றவியல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இல்லாமல் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலே இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் தொடரக்கூடாது. இது உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தியை திணிப்பதும் மற்றும் மத ரீதியாக மக்களை பிளவுப்படுதுமே மத்திய அரசின் நோக்கம் என்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது” எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “புதிய மூன்று சட்டங்களின் பெயர்கள் வாயில் நுழையாததால் நான் இந்த பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது நீதி அரசர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் not discussed. இது விவாதிக்கப்பட்ட சட்டங்கள் இல்லை. இந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் இளம் வழக்கறிஞர்களை பெரிய அளவில் பாதிக்கும். Master brain of India is Tamilnadu. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றால் மத்திய அரசு அதனை புரிந்து கொண்டு கைவிட வேண்டும். புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த வழக்கு கூடிய விரைவில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?