KL Rahul About IPL Rule DRS in IND vs SL Match : இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொலும்புவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக, துனித் வெல்லலகே 65 பந்துகளில் எடுத்ததோடு, தனது முதல் அரைச்சதத்தை பதிவு செய்தார். அவருக்கு அடுத்தப்படியாக, தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் சீங் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷிவம் துபே, மொஹமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது. அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 58 ரன்களும், அக்ஷர் பட்டேல் 33 ரன்களும், கே.எல்.ராகுல் 30 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் வஹிந்து ஹசரங்கா மற்றும் சரித் அசலங்கா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதற்கிடையில், இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 14 ஓவரை இந்திய அணி வீரர் ஷிவம் துபே பந்துவீசினார். அப்போது, 4ஆவது பந்தை, நடுவர் வைடாக அறிவித்தார். ஆனால், கால் பேடில் பந்து பட்டது போன்ற சப்தம் வந்ததாக கேப்டன் ரோஹித் சர்மாவிடம் முறையிட்டதோடு, ரிவ்யூ கேட்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அப்போது, இதுகுறித்து விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுடன் கேப்டன் ரோஹித் சர்மா விவாதித்தார். “நீங்கள் பந்து பேடில் பட்டதா இல்லையா என்பதை தெரிந்திருக்க வேண்டும். பேடில் படாமல் இருந்திருந்தால், சப்தம் கேட்டதாக துபே எப்படி உறுதியாக சொல்வார்” என்றார்.
அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல், “ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் ரிவ்யூ [மேல்முறையீடு] கேட்க முடியும். அதனால் தான், ஷிவம் துபே அப்படி சொல்லி இருக்கிறார்” என்று கூறினார்.
அதாவது சர்வதேச போட்டிகளில் வைடு பந்துகளுக்கு, மேல்முறையீடு [DRS] கோர முடியாது என்பதை மறந்து ஷிவம் துபே ரிவ்யூ கேட்பதாக கே.எல்.ராகுல் தெளிவுபடுத்தியதை அடுத்து ரோஹித் சர்மா அமைதியானார்.
அவர்களுக்கு இடையேயான இந்த உரையாடல் ஸ்டெம்பிற்கு பின்னால் இருக்கும் மைக்கில் பதிவாகியுள்ளது. ஆனால், அதே ஓவரில் ஷிவம் துபே ஒருநாள் போட்டியில், தனது முதல் விக்கெட்டை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.