கந்த சஷ்டி விழா.. பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முருகப்பெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மாதம் தோறும் சஷ்டி திதி வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதி சிறப்புடையது. பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் இன்று (நவ.2) தொடங்குகிறது. அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா இன்று மதியம் மலைக்கோயிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.
அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோயிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ. 8ம் காலை 9.30 மணிக்கு மலைக்கோயிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ. 7ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். மேலும் தீபாவளி தொடர் விடுமுறை ஒட்டியும் கந்த சஷ்டி விழா இன்று தொடங்க உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.
What's Your Reaction?