Arunthathiyar Reservation : ‘உங்களுக்கு ஏன் எரிகிறது’ - செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி
Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, தகாத வார்த்தையால் பதிலளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ எடுத்து நடத்த வேண்டும். அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கிறது. சமுதாய பணி செய்யும் மருத்துவர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டம் 1929ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றார்கள். அவர்களின் குத்தகை 2028இல் நிறைவடைகின்றது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அங்கிருக்கின்றனர். கம்பெனிதான் வெளியேற வேண்டுமே தவிர, மக்கள் அல்ல.
கம்பெனி மூலமாக மக்களை வெளியேற்றும் முயற்சி நடக்கின்றது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கேயே இருந்து வனத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கின்றேன். மாநில அரசு இதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொள்ள கூடாது. வால்பாறை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, ஏற்காடு என பல பகுதிகளில் இதுபோன்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இதை கருத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் துறைகளில் 22 சதவீத ஒதுக்கீடு, மாநில அரசில் 19 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு வழங்ப்படுகின்றது. தமிழகத்தில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு கடைநிலை அரசு பணிகளில் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. ஏ, பி பிரிவு அரசு பணிகளில் 3 சதவீதம் கூட நிரப்பபடவில்லை. அதை நிரப்புவதற்கு பதிலாக அருந்த்தியினருக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருதலைபட்சமாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, முன்னுரிமை அளித்து அருந்ததியினரை மட்டுமே பட்டியல் இன இடங்களை நிரப்பிவிட்டனர். இதை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் முன்னுரிமை கொடுக்க சொல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில், கிரிமிலேயேர் பிரச்சினைகள் இருக்கின்றது. பட்டியல் சமூகத்தில் உள்ள 3 சமுதாய பிரதிநிதிகளை அழைத்து தமிழக முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதில், பிரச்சினைகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
அருந்ததியர் சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, தகாத வார்த்தையை கூறிய கிருஷ்ணசாமி, இதற்கு ஏன் உங்களுக்கு எரிகிறது என்று முடித்தார். அவர் பயன்படுத்திய அந்த வார்த்தையை கண்டித்துள்ள பத்திரிக்கையாளர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?