இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி லார்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங் தேர்வுசெய்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பெரியளவில் சோபிக்காததால், இங்கிலாந்து தொடக்கத்தில் தடுமாறியது. டான் லாரன்ஸ் 9 ரன்களிலும், ஓலீ போப் 1 ரன்னிலும் வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மற்றொரு புறம் நங்கூரம் நின்ற அனுபவ வீரர் ஜோ ரூட் இலங்கை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். இதனையடுத்து ஜோ ரூட் 162 பந்துகளில் தனது 33ஆவது சதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அலஸ்டைர் குக்-இன் சாதனையை சமன் செய்தார். மேலும், அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை பிடித்தார்.
இதற்கிடையில், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய கஸ் அட்கின்சன் - ஜோ ரூட் இணை 7ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோ ரூட் ரத்நாயகே பந்திவீச்சில் வெளியேறினார்.
இதன் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மாத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, மிலன் ரத்நாயகே, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஜோ ரூட் சாதனை:
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜோ ரூட் இதுவரை 6,630 [134 இன்னிங்ஸ்] ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அலஸ்டைர் குக் 6,568 [155 இன்னிங்ஸ்] ரன்களும், கிரஹாம் கூட் 5,917 [131 இன்னிங்ஸ்] ரன்களும் எடுத்துள்ளனர்.
அதேபோல், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் [12,274] 7ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் [15,921] முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் [13,378] இரண்டாவது இடத்திலும், ஜாக் காலிஸ் [13,289] மூன்றாவது இடத்திலும், ராகுல் டிராவிட் [13,288] நான்காவது இடத்திலும், அலஸ்டைர் குக் [12,742] ஐந்தாவது இடத்திலும், குமார் சங்ககாரா [12,400] ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்டீவ் ஸ்மித் (32), கேன் வில்லியம்சன் (32), ஸ்டீவ் வாக் (32) ஆகியோரின் சாதனை முறியடித்துள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அலஸ்டைர் குக் உடன் (33) முதலிடத்தை சமன் செய்துள்ளார்.
இவருக்கு முன்னதாக, ஜெயவர்தனே, பிரையன் லாரா, சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான் ஆகியோர் 34 சதங்களும், ராகுல் டிராவிட் 36 சதங்களும், இலங்கை வீரர் சங்ககரா 38 சதங்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 41 சதங்களும், ஜாக் காலிஸ் 45 சதங்களும், சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களையும் விளாசியுள்ளனர்.
சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 19 சதங்கள் தேவையாக உள்ளது. ஜோ ரூட்டிற்கு தற்போது 33 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், 3 அல்லது 4 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் ஆண்டுக்கு 6 சதங்கள் எடுத்தாலும், சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில், 12,274 ரன்களை குவித்துள்ளார். அதேபோல், சச்சின் ஒட்டுமொத்தமாக 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரின் இந்த சாதனையை முறியடிக்க 3,648 ரன்கள் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் ரன்கள் எடுத்தால், இந்த சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவே கருத்தப்படுகிறது. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.