டி20 மகளிர் உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத், மந்தனா அதிரடி.. இலங்கையை சுருட்டிய இந்தியா
டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐக்கிய அரபு எமீரகத்தில் டி20 மகளிர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ’ஏ’ பிரிவில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணி பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், 3ஆவது லீக் போட்டியில் இலங்கை உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய தொடக்க வீராங்கணைகள் இன்னிங்ஸை சிறப்பாக கொண்டு சென்றனர். ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தனர்.
பின்னர், ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அத்தபத்து பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் ஸ்மிருதி மந்தனா, 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கடைசிவரை களத்தில் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இந்திய அணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக கவிஷா திக்ஹரி 21 ரன்களும், அனுஷ்கா சஞ்சீவினி 20 ரன்களும், அமா காஞ்சனா 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.
இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா ஷோபனா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் இரண்டு வெற்றிகளுடன் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது.
What's Your Reaction?