பாகிஸ்தானை ஓடவிட்ட இந்தியா - மகளிர் டி20 உலகக்கோப்பையில் அபாரம்
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது லீக் போட்டியில், இந்திய அணியும், பாகிஸ்தான் அணியின் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் வீராங்கனைகள் பெரிய அளவில் சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 29 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. அதிகப்பட்சமாக, நிடா தர் 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் முனீபா அலி 17 ரன்களும், சயீதா அரூப் ஷா 14 ரன்களும், கேப்டன் பாத்திமா சனா 13 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் வெளியேறியபோதும், ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
ஷஃபாலி வர்மா 32 ரன்களும் (35 பந்துகள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களும் (28 பந்துகள்) எடுத்து வெளியேறினர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியாக இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 29* எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரை, இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
What's Your Reaction?