இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் - பேட் கம்மின்ஸ் சர்ச்சை பேச்சு
என்னுடைய அணியில் இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதுவரை 1996ஆம் ஆண்டில் இருந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக மட்டுமே நடைபெற்ற நிலையில், முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற உள்ளது.
2016 முதல் தொடர்ந்து இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று வரும் நிலையில், இம்முறை இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகக்கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியுடனான மோசமான தோல்விக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ள இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு முன்னர், நிகழ்ச்சி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் டிராவிஸ் ஹெட், நாதன் லயன், ஸ்காட் போலண்ட், மிட்சேல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். வீரர்களிடம் ஒரேயொரு இந்திய வீரரை ஆஸ்திரேலியா அணியில் சேர்க்க வேண்டும் என்றால், எந்த வீரரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிராவிஸ் ஹெட், ரோகித் சர்மாவின் பேட்டிங் அதிரடியாக இருக்கும் அவரைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறினார். போலாண்ட் பேசுகையில், நிச்சயமாக ஜஸ்பிரிட் பும்ராவை தான் தேர்வு செய்வேன். 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார் என்று கூறினர். மிட்சல் மார்ஷ், இளம் வீரராக நம்பர் 5ல் விளையாடி வரும் ரிஷப் பண்ட் தான் என்னுடைய தேர்வு என்று கூறியுள்ளார். நேதன் லயன் நான் நிச்சயம் விராட் கோலியை தேர்வு செய்வேன் என்றார்.
இறுதியாக பதிலளித்த பேட் கம்மின்ஸ், நான் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று கூறினார். இவரது இந்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்திய ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றால், நிச்சயம் மகத்தான வெற்றியாக இருக்கும் என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை நான், பும்ரா மட்டுமல்லாமல் வரும் நாட்களில் அதிகளவிலான வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?