Ashish Nehra About Gautam Gambhir : இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி, கொலும்புவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்களும், துனித் வல்லெலகே 39 ரன்களும், குசல் மெண்டில் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை, அக்ஷர் பட்டேல் மற்றும் மொஹமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, கடைசி 15 ஓவர்களில் 104 ரன்கள் குவித்தது. இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீசியது தான். அவர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாகவே ஆடினர். அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித், 29 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] அரைசதம் விளாசினார். பின்னர் 64 ரன்களில் வெளியேறினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்தனர்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் எவருமே நிலைத்து ஆடவில்லை. களத்திற்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர். சுப்மன் கில் (35), ஷிவம் துபே (0), விராட் கோலி (14), ஷ்ரேயாஸ் ஐயர் (7), கே.எல்.ராகுல் (0) என அடுத்தடுத்து வெளியேறி சொதப்பினர். அபாரமாக பந்துவீசிய ஜெஃப்ரி வாண்டர்சே முதல் 6 விகெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அதன் பின்னர் சிறிதுநேரம் அணிக்கு நம்பிக்கை கொடுத்த அக்ஷர் பட்டேல் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் (15), மொஹமது சிராஜ் (4), என 3 பேரையும் சரித் அசலங்கா வெளியேற்றினார். இறுதி விக்கெட்டாக அர்ஷதீப் சிங் 3 ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேற இந்திய அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்குள் சுருண்டது. முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்த 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆகப்பெரிய கொடுமை.
இதனையடுத்து, அணித் தேர்வில் சொதப்பியதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பலரும் விமர்சித்து வருகின்றனர். ரிஷப் பண்ட், கலீல் அஹமது, ரியான் பராக், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்னும் களமிறக்கப்படாமல் உள்ளனர். ஒருவேளை 3ஆவது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனாலும், ரியான் பராக், ஹர்ஷித் ராணா ஆகியோர் தங்களது அறிமுகப் போட்டியிலேயே விளையாடாமல் உள்ளனர்.
இந்நிலையில், கம்பீரின் முடிவு குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா விமர்சனம் செய்துள்ளார். இது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெஹ்ரா, புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விளையாடும் லெவன் அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்வார் என எதிர்பார்க்கிறேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களை இந்தத் தொடரில் விளையாடு வைத்ததற்கு பதிலாக, புதிய முகங்களை மையப்படுத்தி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அபூர்வமாக இந்திய அணி 2-3 மாதங்களுக்குப் பிறகு தான் அடுத்த தொடரில் விளையாட உள்ளது. அப்போது, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கலாம். கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்று எனக்கு தெரியும். அவர் அனுபவ வீரர்களுடன், நேரத்தை செலவிட விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
ஆனால், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரையும் கவுதம் கம்பீர் அறியாதவர் கிடையாது. அவர்கள் இருவருடன் சமன்பாட்டை பேண விரும்புவதற்கு, அவர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. ஆகையால், புதிய வீரர்களை வைத்து முயற்சியில் ஈடுபடுவதற்கு, அவருக்கு இது சிறந்த வாய்ப்பு. அவரது அணுகுமுறை தவறானது என்று நான் கூறவில்லை. ஆனால் அது இந்தத் தொடரின் உத்திகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.