இதுவா பெண்களுக்கான ஆட்சி? திமுக அரசை சாடிய முன்னாள் அமைச்சர்!
பெண்களுக்கான ஆட்சி என்று திமுக சொல்கிறது என்றால் எதற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவ. 12) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நமது வெற்றிதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். அதிமுகவில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டு மிகை மின் மாநிலமாக இருந்தது. அறிவிப்பு இல்லாமல் வாரத்திற்கு இருமுறை மின்சாரத்தை துண்டிக்கிறார்கள். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைகிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு தெரிகிறதா இல்லையா? அதேபோன்று மின்சார கட்டணமும் உயர்ந்து கொண்டே போகிறது. திமுக அரசின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அதிமுகவில் புதிதாக சேரும் இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். எப்பொழுது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். 2026-ல் திமுகவை தோற்கடிக்க போகிறோம். அடுத்து தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான ஆட்சிதான்.
கடந்த காலங்களில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை. அதிமுகவை வழி நடத்தக்கூடிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் தவறு நடந்திருக்கிறது என்று சொல்வது பொய்யான தகவல். பெண்களுக்கான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். பெண்களுக்கான ஆட்சி என்று திமுக சொல்கிறது என்றால் எதற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திருக்கிறார்கள். மேலும் கால்நடைகள் ஆடு மற்றும் மாடு, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுத்திருக்கிறோம். இவை அனைத்தும் நாங்கள் பெண்களுக்கு தான் கொடுத்திருந்தோம். ஏன் தற்பொழுது இவற்றை நிறுத்தியுள்ளீர்கள்? பெண்களுக்கான திட்டம் என்பது டவுன் பேருந்து இலவச பயணம். அதை ஒன்று மட்டும்தான் இந்த திமுக அரசு கொடுத்திருக்கிறது. எப்படி நீங்கள் பெண்களுக்கான ஆட்சி என்று சொல்வீர்கள்? பெண்களுக்குதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இலவசமாக மிக்ஸி மற்றும் கிரைண்டர் கொடுத்தார். இது போன்ற திட்டங்களை திமுக சொல்ல முடியுமா?
பெண்கள் உரிமை தொகையில் மாதம் ஆயிரம் (1,000) ரூபாய் கொடுக்கிறார்கள். அதை எத்தனை நபர்களுக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள்? அதிலும் கட்சி நபர்களை பார்த்து பார்த்து கொடுக்கிறார்கள். மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் கொடுத்தோம். அம்மா உணவகத்தில் பெண்கள்தான் பணிபுரிகிறார்கள். ஆனால் அதையே திமுக அரசு நிறுத்த முயற்சிக்கிறது. அப்போ பெண்களுடைய ஆட்சி எப்படி நடக்கும்? பெண்களுக்கான ஆட்சி என்பது எந்த வகையில் ஏற்க கூடியது. இளைஞர்கள் பதவியை எதிர்பார்க்கிறார்கள். மேலும் புதிய கட்சிகளுக்கு சென்றால் பதவி கிடைக்கும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதிமுகவிலும் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை என்று அணிகள் இருக்கிறது. அதிமுகவில் உள்ள இளைஞர்கள் வேற எந்த ஒரு கட்சிக்கோ சென்றார்கள் என்று சுட்டி காட்ட முடியுமா?” என பேசினார்.
What's Your Reaction?