அரசியல்

அப்போதும் செய்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள்.. உதயநிதி மீதான விமர்சனத்திற்கு ஈஸ்வரன் பதில்

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும் விமர்சனம் செய்தார்கள் என்றும் பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா என பார்க்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அப்போதும் செய்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள்.. உதயநிதி மீதான விமர்சனத்திற்கு ஈஸ்வரன் பதில்
உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனத்திற்கு ஈஸ்வரன் பதில்

நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஈஸ்வரன், “மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கின்றோம். மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது. குறைவதும் கிடையாது. மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது என்பது அதற்கு தீர்வு அல்ல.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும், இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட போதும், சட்டமன்ற வேட்பாளராக அறிவித்த போதும், அமைச்சர் ஆகும்போதும் பலர் விமர்சனம் செய்தார்கள்.

அவர் எடுத்துக்கொண்ட பதவி, பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா? ஏதாவது குறை இருக்கிறதா? குற்றச்சாட்டு இருக்கிறதா என பார்க்க வேண்டும். விளையாட்டுத்துறை இப்போது சிறப்பாக செயல்படுகிறதா, இல்லையா?

இதற்கு முன்பு இருந்ததை விட விளையாட்டு துறையில் ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று வெளியில் நன்றாக தெரிகிறது, அவர் விளையாட்டுத் துறையில் பல்வேறு விஷயங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார் அவர் மீது குற்றச்சாட்டு என எதுவுமே கிடையாது.

அமைச்சர் ஆகும்போது எனது செயல்பாட்டின் மூலம் பதில் சொல்வேன் என கூறினார் அதன்படி சொல்லி உள்ளார். உதயநிதி மீது யாரும் குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை. துணை முதலமைச்சருக்கு எதிராக இன்று பேசக்கூடியவர்கள் அரசியலுக்காக சொல்லக்கூடியவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக 40 சதவீத குற்றச் சம்பவம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் சொல்வது அரசியலுக்காக சொல்கிறார். எந்த டேட்டா வைத்து விபரங்கள் சொல்கிறார் என தெரியவில்லை.

அவினாசி - அத்திக்கடவு திட்டம் பல்வேறு போராட்டக்களுக்கு பிறகு  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேப்போல திருமணிமுத்தாறு - காவேரி இணைப்பு திட்டம் நிறைவேற்றக்கோரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வரும் உறுதி அளித்துள்ளார் விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்காததால் மாநில அரசு நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. நிதி தேவை என்பது அத்தியாவசியமானது. நிதி பெறுவதற்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற போராடி வருகின்றோம்” என்றார்.