வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர்? - பரபரக்கும் சேலம் திமுக!

முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர் ராஜேந்திரன் என்கின்ற எதிர்பார்ப்பு சேலம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Oct 7, 2024 - 02:04
 0
வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர்? - பரபரக்கும் சேலம் திமுக!
வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர் ராஜேந்திரன்

வீரபாண்டி ஆறுமுகம் என்ற பெயரை கேட்டாலே சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள் அதிரும் என்றே கூறலாம். ஏனெனில் அவர் மறைவுக்குப் பின்னும் திமுகவினர் மேடையில் பேசும்போது வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை உச்சரித்தாலே போதும் தொண்டர்களின் ஆரவாரம் அளப்பரியதாக இன்றளவும் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

அவரது மறைவுக்குப் பின்னர் சேலம் மாவட்டத்தில் திமுகவில் ஒரு வெற்றிடம் இருப்பதாகவே இன்றளவும் தொண்டர்கள் உணர்ந்து வருகின்றனர். இதனிடையே சேலம் மாவட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் இடையே ஒற்றுமை போக்கு இல்லாததால் தலைமை அடுத்தடுத்த கட்டத்தில் யோசித்து மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என தனி தனி செயலாளர்களையும் நியமித்தது. 

இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சேலம் மாவட்டத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் கே என் நேரு சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அடிக்கடி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.என்.நேரு திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  ஒருங்கிணைத்து செயல்படுமாறு அடிக்கடி கூறி வந்தார். 

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்த காலத்தில் இருந்து தனித்து விடப்பட்ட இராஜேந்திரன் பல ஆண்டு காலமாக பொறுமையாக இருந்து போராடி சேலம் மத்திய மாவட்ட செயலாளராகவும் சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தனது நிலையை உயர்த்திக்கொண்டார். 

மாநகர் பகுதியில் தனக்கென ஆதரவாளர்களின் செல்வாக்கையும் நாளுக்கு நாள் இராஜேந்திரன் சேகரித்து வந்தார். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு சற்று நெருக்கமான இராஜேந்திரனுக்கு அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பு கொடுத்ததில் அடுத்த உயர்வையும் அவர் எட்டி உள்ளார். 

இராஜேந்திரன் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கும் முன்னரே, பொறுப்பு அமைச்சராக இருந்த கே.என்.நேரு சேலத்தில் திமுகவில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கூட்டம் நடத்தினார். அப்போது, சேலத்திற்கு புதிய அமைச்சர் வர உள்ளார் என்பதை நயமாக பேசிச் சென்றார்.

சேலத்தில் அரசு விழாக்கள் திமுக கட்சி கூட்டங்கள் என அனைத்திற்கும் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்த நிலையில், தற்போது புதிய அமைச்சர் இராஜேந்திரனுக்கு முன்னிலை வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தாருக்கு முக்கிய பொறுப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில், இந்த பொறுப்பு மூலம் திமுக தலைமை அமைச்சர் இராஜேந்திரனின் கரத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்திற்கு திமுகவில் அமைச்சர் பொறுப்பு வழங்கியிருப்பது தொண்டர்களிடையே சற்று உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

என்ற போதும் திமுகவில் கட்டுக்கோப்பாகவும் காறாராகவும் சேலத்தில் திமுகவை வழி நடத்திய வீரபாண்டி ஆறுமுகத்தை போன்று இராஜேந்திரனும் தன் நிலையை உயர்த்திக் கொள்வாரா என்று தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 

வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை மற்றொருவர் தட்டிச் செல்ல முடியாது என்றாலும் புதிதாக அமைச்சர் பொறுப்பு ஏற்றுள்ள இராஜேந்திரனை வைத்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் சேலம் மாவட்டத்தை திமுக தன் வசத்திற்கு கொண்டுவர முயற்சி செய்கிறது என்பதை அறிய முடிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow