தீபாவளி பண்டிகை கோலாகலம்... கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள்!

இன்று (அக். 31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Oct 31, 2024 - 22:34
 0
தீபாவளி பண்டிகை கோலாகலம்... கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள்!
தீபாவளி பண்டிகை கோலாகலம்... கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்ற தீபாவளி தஞ்சையிலும்  களை கட்டி உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு பால் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பலவகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புது ஆடைகள் உடுத்தி குடும்பத்துடன் வந்து பெருவுடையாரை வழிபட்டு சென்றனர்.  பெருவுடையையாருக்கு விபூதி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அபிஷேகத்தை தொடர்ந்து மலர்களால் பெருவுடையார் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை வழிபட்டு சென்றனர். மேலும் கோயில் வளாகத்தில் பரிவார தெய்வங்களாக எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி, வராகி, விநாயகர், முருகன் ஆகிய சன்னதிகளிலும் பக்தர்கள் வழிபட்டு சென்றனர். தீபாவளி திருநாளில் பெருவுடையார் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டது மறக்க முடியாத நினைவாக உள்ளது என வெளியூர்களில் இருந்து வந்திருந்த மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். 

அதேபோல மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு வைர கிரிடமும், தங்ககவசம் சாத்தியும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தியும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலயே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பின்னர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தனர். மதுரை மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர். 

இதேபோல் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயில், அழகர்கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலுமே பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow