இந்தியா

ஆப்சண்ட் ஆனதுக்கு 200 ரூபாயா..! ராகுலுக்கு செக் வைத்த நீதிமன்றம்

சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்சண்ட் ஆனதுக்கு 200 ரூபாயா..! ராகுலுக்கு செக் வைத்த நீதிமன்றம்
ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை’ (Bharat Jodo Yatra) என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி  மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடந்த யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசியவாதியும், சுதந்திர போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் இது சமூகத்திற்குள் பிரிவினைகளை உருவாக்கும் விதத்தில் அமைந்ததாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை நேரில் ஆஜராகும் படி லக்னோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் படிக்க: பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?

ஆனால், மக்களவை எதிக்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்க முன்பே திட்டமிட்டிருந்ததால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது என்றும் மேலும் பல பணிகள் இருப்பதால் ராகுல் காந்தி நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்பு இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டு நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை விலக்குக்கான காரணங்களாக நீதிமன்றம் குறிப்பிட்டது.