4 பேர் டக் அவுட்.. 40 ரன்களுக்குள் சுருண்ட மலேசியா.. இலங்கை அணி அபார சாதனை

Women Asia Cup : 2024 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Jul 23, 2024 - 09:19
Jul 23, 2024 - 11:19
 0
4 பேர் டக் அவுட்.. 40 ரன்களுக்குள் சுருண்ட மலேசியா.. இலங்கை அணி அபார சாதனை
சதமடித்த சமரி அத்தபத்து மற்றும் இலங்கை வீராங்கனைகள்

Women Match Asia Cup 2024: 9ஆவது டி20 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் மோதி வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரின் 7ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மலேசியா அணிகள் மோதின. தம்புலாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீராங்கனை விஷ்மி குனரத்னே ஒரு ரன்னிலேயே வெளியேறினார். தொடர்ந்து ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் ஹர்ஷிதா சமரவிக்ரம 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 69ஆக இருந்தது. பின்னர், சமரி அத்தபத்து மற்றும் அனுஷ்கா சஞ்ஜீவனி இருவரும் அபாரமாக ஆடினர்.

குறிப்பாக, 35 பந்துகளில் அரைசதத்தை கடந்த சமரி அத்தபத்து அடுத்த 28 பந்துகளில் மேலும் 50 ரன்கள் குவித்து 63 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். மேலும், கடைசி 3 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் விளாசிய அத்தபத்து பவுண்டரி ஒன்றையும் விளாசினார். மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான். இந்த சாதனையை சமரி அத்தபத்து படைத்துள்ளார். கடைசி வரை களத்தில் இருந்த அத்தபத்து 69 பந்துகளில் [14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 119 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி 11 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 9 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது. மலேசிய அணி தரப்பில், வினிஃப்ரெட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகளையும், சுபிகா மணிவண்ணன் மற்றும் மஹிரா இஷாட்டி இஸ்மாயில் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக எல்சா ஹண்டர் மட்டும் 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர்.

கேப்டன் வின்ஃப்ரெட் துரைசிங்கம், தன்சுரி முஹுனன், சுபிகா மணிவண்ணன் மற்றும் நூர் இஷதுல் ஷைஃபியா ஆகிய 4 பேரும் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் ஷாசினி கிம்ஹனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow