'காங்கிரசில் இருந்து வெளியேறுங்கள்.. இல்லையென்றால்..' பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!

ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Sep 8, 2024 - 21:15
Sep 9, 2024 - 10:55
 0
'காங்கிரசில் இருந்து வெளியேறுங்கள்.. இல்லையென்றால்..' பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!
Bajrang Punia

டெல்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த இருவரும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டனர். 

கடந்த ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்ததால் அந்த கட்சியில் இணைந்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக எங்களின் போராட்டம் தொடரும் என்றும் இருவரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பஜ்ரங் புனியாவின் செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஜ்ரங் புனியாவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த செய்தியில், ''பஜ்ரங்..காங்கிரஸை விட்டு வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது இல்லை. ஹரியானா தேர்தலுக்கு முன்பாக இது எங்களது கடைசி எச்சரிக்கை. காங்கிரசை விட்டு வெளியேறவில்லை என்றால் நாங்கள் யாரென்று உங்களுக்கு காட்டுவோம். இது குறித்து எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள். இது முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை'' என்று கூறப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பஜ்ரங் புனியா, ஹரியானா மாநிலம் சோனிபட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா தேர்தலுக்கு முன்பாக இருவரும் காங்கிரஸில் இணைந்ததால் தேர்தலில் அக்கட்சிக்கு பலம் கூடியுள்ளது. இதை மனதில் வைத்து பாஜகவை சேர்ந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இவர்கள் இருவரும் காங்கிரசில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த பிரிஜ் பூஷன், ''மல்யுத்த வீரர்கள் நடத்தியது போராட்டம் கிடையாது. அவர்கள் பெண்களுக்காக போராடவில்லை; அரசியலுக்காக போராடினார்கள். இப்போது வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இணைந்தன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இந்த விஷயத்தில் நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது'' என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த பஜ்ரங் புனியா, ''நாங்கள் காங்கிரசில் இணைந்ததால் தேசத் துரோகி. பாஜகவில் இணைந்திருந்தால் தேசப் பற்றாளர்கள் என்று கூறியிருப்பவர்கள். பிரிஜ் பூஷனுக்கும், காங்கிரசுக்கும் நாங்கள் பாஜகவில் இணைந்ததுதான் பிரச்சனை'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow