பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பொறுப்பு.. மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு!

BSP Armstrong Wife Porkodi : பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆனந்தன் அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Jul 22, 2024 - 15:33
Jul 22, 2024 - 15:41
 0
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பொறுப்பு.. மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு!
BSP Armstrong Wife Porkodi

BSP Armstrong Wife Porkodi : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரில் காவல் நிலையத்துக்கு அருகில் நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஆம்ராஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆனந்தன் அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைத் தலைவராக இமான் சேகரும், மாநில பொருளாளராக கமல்வேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்தன் 1992 முதல் 1997 வரை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர். 

கல்லூரியில் சேர்மனாக இருந்த போது அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் விழாவினை சிறப்புடன் வழி நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜாஇளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக 6 மாத காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார். 

சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் விவாகரத்து  வழக்குகளை நடத்தியவர் இவர் என தகவல் வெளியாகி உள்ளது. மிக முக்கியமான வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர். 

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்தும் அவரை விடுவித்தவர். மாணவர்கள் கல்வி பயில இவர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

ஆம்ஸ்ட்ராங்குடன் 2006ம் ஆண்டு முதல் இணைந்து தொடர்ந்து பணியாற்றியவர். கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் திருவள்ளூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு 41,000 ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் பெற்றவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow