உலகம்

பில் கட்டாத இளம் பெண்.. மொட்டை அடித்து அனுப்பிய பார் ஓனர்!

By Christon
01 Sep 2026, 01:36 PM
தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள பிரபல பாரில் மது மற்றும் உணவு அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத 18 வயது இளம் பெண்ணுக்கு பார் ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிங்க்லா (Pinklao) பகுதியில் அமைந்துள்ள பிரபல பாருக்குள் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நுழைந்த அந்த 18 வயதான இளம் பெண், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் உணவுகளையும் மதுவையும் உண்டு மகிழ்ந்ததில், பில் தொகை சுமார் 60,000 தாய் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம்) வரை எட்டியுள்ளது.

ஆனால், அந்தப் பெண் பணத்தைச் செலுத்தாமல் நழுவ முயன்றபோது பார் ஊழியர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல், தாங்களே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை ஈடுகட்ட அவரது தலைமுடியை விலைக்கு வாங்குவது போன்ற ஒரு ஒப்பந்தத்திற்கு அப்பெண்ணைச் ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் தோள் வரை இருந்த கூந்தலை, பார் ஊழியர் ஒருவர் மின்சார ஷேவர் மூலம் முழுமையாக மொட்டை அடிக்கிறார். "நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, சந்தை விலையைத் தான் தருகிறோம்" என்று பின்னணியில் ஒரு நபர் பேசுவதும் கேட்கிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கூந்தலை விற்றோ அல்லது தானமாக வழங்கியோ பில் தொகையை ஈடுசெய்யப் பார் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்யத் தாய்லாந்தின் சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் கலவையான கருத்துகளைப் பெற்று வருகிறது. காவல்துறை வரை சென்று வழக்கைச் சந்திப்பதை விட இது நலம் என்று சிலர் கருத்து தெரிவிக்க, பார் ஊழியர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு எனப் பல சட்ட வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.