தமிழகக் காவல்துறையின் நிரந்தரச் சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிப்பதற்கான பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்தியத் தேர்வாணையம் (UPSC) 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் இறுதிப் பட்டியலைத் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் சமயத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சந்தீப் ராய் ரத்தோர் தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்து புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலக் காவல்துறையின் புதிய நிரந்தர டிஜிபியை நியமிப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள மத்தியத் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) அலுவலகத்தில் டிஜிபி நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பணிப் பட்டியலை மத்தியத் தேர்வாணைய அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.
ஆலோசனையின் முடிவில், புதிய டிஜிபி பதவிக்கான 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் இறுதிப் பட்டியலை மத்தியத் தேர்வாணையம் தமிழக அரசிடம் முறைப்படி வழங்கியுள்ளது. காவல்துறை வட்டாரங்களின்படி, அந்தப் பட்டியலில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்று அதிகாரிகளில் ஒருவரைத் தமிழக அரசு மாநிலத்தின் புதிய நிரந்தர டிஜிபியாகத் தேர்வு செய்யும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.